பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் வரலாறு காணாத மழை: கேரளாவுக்கு தண்ணீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை
கூடலுார்: முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பில் ஒரு வாரமாக சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. தேக்கடியில், 15.8 செ.மீ., வீதம் அதிகபட்சமாக மழை பெய்தது. இதனால் இதுவரை இல்லாத வகையில் அணைக்கு நீர்வரத்து, விநாடிக்கு 71,733 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடிக்கு மேல் உயர்ந்து, 138 அடியை எட்டியது. அணையின் மொத்த உயரம் 152 அடி. ரூல்கர்வ் எனப்படும் நீர்மட்ட கால அட்டவணை விதிமுறைப்படி, தற்போது அணையின் நீர்மட்டம் 137.75 அடியாகவும், அக்., 30ல் 138 அடியாகவும் இருக்க வேண்டும். இந்நிலையில், நீர்மட்டம் இரவு, 136 அடியை எட்டியவுடன் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத் துறையினர் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவித்தனர். நேற்று நீர்மட்டம், 138 அடியை கடந்ததால் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் திறக்கப்பட்டு, கேரள பகுதிக்கு விநாடிக்கு 7,163 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்து அதிகமாக இருப்பதால் திறக்கப்படும் நீரின் அளவு அவ்வப்போது அதிகரிக்கப்படும். அணையில் நீர் இருப்பு 6,571 மில்லியன் கன அடியாகும். தமிழக பகுதிக்கு 1,400 கன அடி திறக்கப்பட்டுள்ளது. தடுப்பணை உடைப்பு கனமழையை தொடர்ந்து நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதால் தமிழக நீர்வளத்துறை பொறியாளர்கள் அணை பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர் . நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்த போதிலும் நேற்று பகலில் மழை சற்று குறைந்தது. முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்பில் துவங்கி, வைகை அணை வரையுள்ள முல்லை பெரியாற்றில் ஓடுகிறது. இதன் மூலம் லோயர்கேம்ப் குருவனத்துப்பாலம், காஞ்சிமரத்துறை , வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய நான்கு இடங்களில் மினி பவர் ஹவுஸ் அமைத்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக, தண்ணீரை தேக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில், குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள மினி பவர் ஹவுசின் தடுப்பணையின் தெற்கு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இரவு பணியில் இருந்த அலுவலர்கள் மேல் பகுதிக்கு சென்று உயிர் தப்பினர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டர், மின்வாரிய அலுவலர்களின் இரண்டு டூ - வீலர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இங்கு இரண்டு ஜெனரேட்டர் மூலம் தலா, 1.25 மெகாவாட் வீதம், 2.5 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் மின் உற்பத்தி செய்ய நீண்ட நாட்களாகும். வெள்ளப்பெருக்கு தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியில் சில நாட்களாக பெய்யும் மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்கிறது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க நீர்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வருஷநாடு மலைப்பகுதியில் பெய்த மழையால் சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடைமடை வரை
தண்ணீர் வேண்டும்
முல்லை பெரியாறு அணை வாயிலாக, தேனி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், பதினெட்டாம் கால்வாயின் முதல்கட்டப் பணிகள், கம்பம் சட்டசபை தொகுதிக் குட்பட்ட தேவாரம் வரை முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இந்த கால்வாயை, போடிநாயக்கனுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கூடலிங்கம் ஆறு வரை நீட்டித்து, முல்லை பெரியாறு நீரும், கூடலிங்கம் வரை வந்தடைந்தது. ஆனால், மூன்று ஆண்டுளாக நீர் கூடலிங்கம் வருவதில்லை; தேவாரம் வரை மட்டுமே வருகிறது. இதனால், போடி நாயக்கனுார் பகுதிக்குட்பட்ட கிராமங்களில், விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது. என் தொகுதி என்பதற்காக, அரசு இதில் பாரபட்சமாக செயல்படுகிறதா என தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின், இதில் கவனம் செலுத்தி, பதினெட்டாம் கால்வாயை சீரமைத்து, கூடலிங்கம் ஆறு வரை நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். - பன்னீர்செல்வம் -முன்னாள் முதல்வர்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 8,000 கோழிகள்
தேனி மாவட்டம், தப்புக்குண்டு விலுள்ள உணவுப்பூங்காவிற்கு தேவையான தண்ணீர், முல்லைப்பெரியாற்றில் சின்னமனுார் அருகே மார்க்கையன்கோட்டையில் உறை கிணறு அமைத்து, அங்கிருந்து பம்பிங் செய்து அனுப்பப்படுகிறது. இத்திட்டத்திற்காக, 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 100 கே.வி.ஏ., திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. இந்த டிரான்ஸ்பார்மர் நேற்று முன்தினம் வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டது. இதனால், உணவுப் பூங்காவிற்கான தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டது. ஆற்றில், 100 அடி துாரத்திற்கு டிரான்ஸ்பார்மர் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சுருளிப்பட்டியில் ஆற்றின் கரை ஓரம், லட்சுமணன் என்பவர் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்தார். வெள்ளம் கொட்டகைக்குள் புகுந்து, 40 ஆடுகளை அடித்து சென்றது. தேவாரம், வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை, 50, என்பவருக்கு, ரங்கநாதபுரத்தில் தோட்டம் உள்ளது. இதில், மூணாண்டி பட்டியை சேர்ந்த கதிரேசன், 30, கோழி பண்ணை நடத்துகிறார். தேவாரத்தில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், வெள்ளம் பெருக்கெடுத்து தோட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைக்குள் புகுந்தது. இதில், பண்ணையில் இருந்த, 8,000 கோழிகள் அடித்து செல்லப்பட்டன.