தெற்கு ரயில்வேயில் நிலைய மேலாளர்கள் குறைப்பு
சென்னை:தெற்கு ரயில்வேயில், நிலைய மேலாளர்கள், 300 பேர் குறைக்கப்பட்டுள்ளனர். தெற்கு ரயில்வேயில், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் என, ஆறு கோட்டங்கள் உள்ளன. சில பிரிவுகளில் ஆட்கள் குறைக்கப்பட்டு, பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரயில் நிலையங்களில் உள்ள நிலைய மேலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, ரயில் நிலைய அலுவலர்கள் சிலர் கூறியதாவது: கொரோனா பாதிப்பின்போது, ரயில்கள் முழு அளவில் ஓடாமல் இருந்தன. அப்போது, ரயில் நிலைய மேலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இரண்டு பேர் இருந்த நிலையில், ஒருவராக குறைத்தனர். தற்போது, தெற்கு ரயில்வேயில் மட்டும், 300 பேர் வரை குறைக்கப்பட்டு உள்ளனர்.சென்னை கோட்டத்தில் மட்டும், 100 பேர் குறைக்கப்பட்டுள்ளனர். இதனால், எங்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. விடுப்பு இன்றி பணியாற்றுவதால், உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது. முன்பெல்லாம் எங்களுக்கு வார விடுமுறையும், மற்ற விடுமுறையும் தடையின்றி கிடைக்கும். இப்போதெல்லாம் விடுப்பு கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எனவே, ஏற்கனவே இருந்ததுபோல், ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் இரண்டு அலுவலர்களை மீண்டும் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.