உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆயிரமாண்டு பழமையான கோவில்கள் புதுப்பிப்பு

ஆயிரமாண்டு பழமையான கோவில்கள் புதுப்பிப்பு

தமிழக அரசின் துறைகளில் அதிகம் விமர்சிக்கப்படும், விவாதிக்கப்படும் துறை ஒன்று உண்டு என்றால் அது, இந்து சமய றநிலையத்துறையாகத்தான் இருக்கும். அரசியல், கருத்தியல் ரீதியாக இத்துறை குறித்து பலரும் அவரவர் நிலைபாட்டில் ஒரு எண்ணத்தினை கொண்டிருக்கின்றனர். அதனால்தானோ என்னவோ, இத்துறையில் செயல்படுத்தப்படும் பல நல்ல திட்டங்கள், நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் முழுமையாக மக்களைச் சென்று சேர்வதில்லை.இந்த அரசு பொறுப்பேற்றபின், 2022ல் அறிவிக்கப்பட்ட நல்லதொரு திட்டம்தான், ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களை புனரமைக்கும் திட்டம். தமிழகத்திலுள்ள எண்ணிலடங்கா பழமையான கோவில்கள் பல்லாண்டுகளாக கவனிப்பாரற்று இருந்தன. ஒவ்வொரு ஆட்சியின் போதும், பழமையான கோவில்களை சீரமைக்க, அவ்வப்போது சிறு சிறு தொகை ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒதுக்கப்படும். அந்நிதியில் சில கோவில்களில் குறிப்பிட்ட சீரமைப்பு பணிகள் மட்டும் நடந்தன.ஆனால், தற்போதைய தமிழக அரசு, கடந்த 2022 முதல், நடப்பாண்டு வரை ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வீதம், இதுவரை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த தொகை ஹிந்து சமய அறநிலையத்துறையில் இருந்து பெறப்படவில்லை. மாறாக பிரத்யேக திட்டம் தீட்டி, அரசின் நிதியில் இருந்து வழங்கப்பட்டிருக்கிறது. இதில், கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இத்திட்டத்திற்கு பொதுமக்கள் தரப்பில், நன்கொடையாக 47 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் பயனை உணர்ந்து, நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே, பக்தர்கள் நன்கொடையினை தாராளமாக வழங்குவர். அவ்வாறுதான், இத்திட்டத்துக்கு நன்கொடைவழங்கியுள்ளனர்.இந்நிதி மற்றும் கோவில் உபயதாரர் நிதி, திருக்கோவில் நிதி, பொதுநல நிதி 131 கோடியுடன் சேர்த்து, மொத்தம் 431 கோடி மதிப்பீட்டில், 274 கோவில்களில் திருப்பணி செய்ய திட்டமிட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின்படி கடந்த மூன்றாண்டுகளில், ஆயிரமாண்டு பழமையான 38 கோவில்களில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது. ஏனைய கோவில்களில் திருப்பணிகள் தொடர்கின்றன.

தொல்லியல் நிபுணர்கள்

இத்திட்டத்தை அமல்படுத்தும்முன், தொல்லியல்துறை நிபுணர்கள் வாயிலாக, ஆயிரமாண்டு பழமையான கோவில்கள், மாவட்டம் வாரியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இதுவரை 714 கோவில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு, எத்தனை சதவீதம் சிதிலமடைந்துள்ளன என ஆய்வு செய்யப்பட்டு (10 - 80 சதவீதம்) வகைப்படுத்தப்பட்டுள்ளன.தொல்லியல் துறையின் ஆய்வு தொடர்வதால் வரும் நாட்களில் இன்னும் எண்ணற்ற பழமையான கோவில்கள் கண்டறியப்படலாம். ஆயிரமாண்டுகால பழமையான கோவில்கள் இவ்வளவு எண்ணிக்கையில் இங்கு இருப்பதே பலரும் அறிந்திராதது!இக்கோவில்களின் திட்டப்பணிகளை கவனிக்க, 'மாவட்ட வருவாய் அதிகாரி' அந்தஸ்தில் 'சிறப்பு அதிகாரி' ஒருவரும், தற்காலிக பணிமாற்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த மூன்றாண்டுகளில், 38 கோவில்கள் முழுமையாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. நடப்பாண்டில் மேலும் பல கோவில்கள் கும்பாபிஷேகத்துக்கு தயாராகும். இதே வேகத்தில் பணிகள் நடந்து 714 கோவில்களும் புனரமைக்கப்பட்டால் பக்தர்கள் முழுமையாக வழிபடத் தயாராகிவிடும்.இது, 'நம் பகுதி கோவில் கும்பாபிஷேகம் நம் காலத்தில் நடந்து... அந்தக் கண்கொள்ளாக்காட்சியை நாம் காணமாட்டோமா...' என்ற ஏக்கத்திலிருக்கும் ஆயிரமாயிரம் ஹிந்து பக்தர்களுக்கு நல்ல செய்தி.

வருவாய் கூடும்

பழமையான கோவில்கள் பலவற்றில், தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. திருப்பணி நடந்து கும்பாபிஷேகம் நிறைவுற்றால் பக்தர்கள் வருகை அதிகரித்து, கோவிலுக்கு வருவாய் கூடும்; மூன்று கால பூஜைக்கான வருவாயையும் அந்தந்த கோவில்களே ஈட்டிக்கொள்ளும்.இதற்கு முந்தைய ஆட்சிக்காலங்களிலும், அரசின் நிதியில் பழமையான குறிப்பிட்ட கோவில்கள், அவ்வப்போது பெரிய திட்டமாக அல்லாமல், சிறு சிறு நிதி ஒதுக்கி சீரமைக்கப்பட்டிருக்கலாம். அதுகுறித்த தகவல் தற்போது நம்மிடம் இல்லை.அதேவேளையில், 'ஆயிரமாண்டு பழமையான கோவில்' என வகைப்படுத்தி, தனித்துவமான திட்டம் தீட்டி, ஆய்வைத் துவக்கி, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் 100 கோடி ஒதுக்கி இதுவரை, 300 கோடி ரூபாயில் திருப்பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பது, இந்த ஆட்சியில் மட்டுமே.இதற்கு முழு முயற்சி எடுத்த ஹிந்து சமய அறநிலையத்துறையையும், அமைச்சர் சேகர்பாபுவையும் நாம் பாராட்டலாம். அரசியல் ரீதியான மாற்றுக்கொள்கை, சிந்தனை கொண்டிருப்போர் கூட, பழமையான கோவில்களில் நடந்து முடிந்துள்ள திருப்பணிகளை ஒரு முறை நேரில் பார்வையிட்டால், தங்களின் கருத்தை, எண்ணத்தை மாற்றிக் கொள்வர் என்பது திண்ணம்!

யுனெஸ்கோ விருது

தஞ்சாவூர் மாவட்டம், துக்காச்சியிலுள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவில் 1300 ஆண்டுகள் தொன்மையானது. இக்கோவிலில் கடைசியாக எப்போது கும்பாபிஷேகம் நடந்தது எனும் தகவலே இல்லாத நிலையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் திருப்பணிகள் முடிந்து, 2023ல், கும்பாபிஷகம் நடந்தது. தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்தமைக்காக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) இக்கோவிலை, 2024ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுக்கு தேர்வு செய்துள்ளது பெருமிதம் கொள்ளச் செய்கிறது. இதே போன்று, இன்னும் பல கோவில்கள் விருது பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிகிறேன்.

- இல. ஆதிமூலம் - வெளியீட்டாளர், தினமலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

REMAN Production
ஜன 26, 2025 22:31

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், ஸீரிராமசமுத்திரம் காவிரி அமராவதி கூடுதுறையில் அயிலூர் சிவன் அயிலைநாயகி திருக்கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இத்திருக்கோவிலுக்கு திருமுழுக்கு எப்போது நடக்குமென ஏங்குவோர் பலர், அரசு மனது வைக்குமா?


Bye Pass
ஜன 26, 2025 20:53

கோவில்களை புதுப்பித்தாக கல்லால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களையும் தூண்களையும் சிமெண்ட் கலவை மற்றும் கான்க்ரீட் பயன்படுத்தி சிதைப்பது கண்டிக்கத்தக்கது


sridhar
ஜன 26, 2025 20:51

எனக்கு தெரிந்து பட்ஜெட்ல கோவில்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.


Balaa
ஜன 26, 2025 16:24

பழமையான கோவில்களை புனரமைப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த திராவிடன் குடுமி 1. ஜோசியர் யாராவது குடும்பத்திற்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும் ௨. இதிலிருந்து வரும் வருமானத்தை கொள்ளை அடிக்கலாம். இவர்களுக்கு வேண்டியவர்களுக்கு பூசாரி வேலை கொடுக்கலாம். மாற்று மதத்தினரை திரிப்தி படுத்த கட்சியினரை விட்டு இந்துக்களை திட்ட வைத்து, இது போன்ற காரியங்களால் அதே இந்துக்களை சமாதானமாக்கி ஒட்டு வங்கி அரசியல் செய்யலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் வித்தை. அயோக்கிய நோக்கத்துடன் செயல் படும் இவனுகளுக்கு இந்த பாராட்டு தேவையா. ௧


Gopalakrishnan Thiagarajan
ஜன 26, 2025 16:19

வடபழனி ஆண்டவா காப்பாற்று


venugopal s
ஜன 26, 2025 15:59

முதல் முறையாக உங்கள் பத்திரிகையை நடுநிலை நாளிதழ் என்று என்னை ஒப்புக் கொள்ள வைத்ததற்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!


venkadesh Raja
ஜன 26, 2025 15:35

உலகில் இருக்கும் கோயில்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.. எளிதல்ல என்பதற்கு காரணம் கடல் போன்றது.. கற்றுக்கொள்ள கணக்கில் அடங்காத நாட்கள் தேவை.. ஆனால் மக்கள் மனதில் ஒன்று தோன்றும்.. தினமலர் நாளிதழில் வரும் ஆன்மீக செய்திகளை படித்தாலே, வீட்டில் இருந்தபடியே ஆன்மீகத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.. அதற்கு ஒரே வரியில் பதில் சொல்லும் வகையில் இந்த கட்டுரையில் அனைத்து தகவலும் அடங்கியுள்ளது... இந்தக் கட்டுரையை எழுதியவருக்கு நன்றி தெரிவிப்பதில் அதைவிட மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த கட்டுரையை ஐந்து நிமிடத்தில் படித்து பல்வேறு ஆன்மீக தகவல்களை தெரிந்து கொண்டேன்.. அதே நேரத்தில் இந்த கட்டுரையை பல மணி நேரம் பல மணி காலம் செலவிட்டு எழுதிய ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வரியில் நன்றி என்று சொன்னால் மட்டும் பத்தாது.. நேரில் சந்தித்து பாராட்டினாலும் மனதிற்கு திருப்தி வராது.. இந்தக் கட்டுரையை உலகம் முழுவதும் உள்ள இந்து மக்கள் மனதில் கொண்டு சேர்த்தால் மட்டுமே மனதார திருப்தி அடைவேன்... என்னை சுற்றி உள்ளவர்களுக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் இந்தக் கட்டுரையை அனுப்பி மிக்க மகிழ்ச்சி அடைவேன் என்ற தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன்.. கட்டுரையை பல மணி நேரம் செலவிட்டு எழுதிய ஆசிரியர் ஐயாவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..


sridhar
ஜன 26, 2025 15:22

வாய் ஓயாமல் ஹிந்து மதத்தை , அதன் நம்பிக்கைகளை பழித்துக்கொண்டு இப்படி ஒப்புக்கு ஏதாவது செய்வது ஏன். இலையில் அறுசுவை உணவு வைத்து ஓரத்தில் அசிங்கத்தை வைத்தால் எவன் பாராட்டுவான் .


பெரிய ராசு
ஜன 26, 2025 14:37

மொதலே திருப்பரங்குன்றத்தை காப்பாத்துங்க


Sivagiri
ஜன 26, 2025 14:10

தெலுங்கு ஆச்சாரியார்கள் படை எடுத்து வந்தா மாதிரி இருக்கு பல கோவில்களில்.., தமிழ் ஆச்சாரியர்களை ஒதுக்கும் நிலைமை, எதிர்த்து கேட்க முடியாத நிலை உள்ளது. தமிழ் ஆச்சாரியார்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து நியமிக்க வேண்டும் . . .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை