திருச்சி: “பொறுப்பு டி.ஜி.பி., நியமனத்தால், தமிழக சட்டம் -- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது,” என்று பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திருச்சியில், நேற்று அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்த போது, தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரை அங்கு சென்று வரவேற்கவில்லை; புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகவே, திட்டமிட்டு நிகழ்ச்சி இருப்பது போல ஏற்பாடு செய்து கொண்டு ஊட்டிக்கு போனார். அடுத்ததாக, சமீபத்தில் பிரதமர் மோடி கோவைக்கு வந்தார். அப்போதும், மரியாதை நிமித்தமாகக் கூட அவரை வரவேற்க வரவில்லை. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு செல்லும் போது, அங்கிருக்கும் முதல்வர்கள் பிரதமரை வரவேற்கின்றனர். பின், சந்தித்து பேசுகின்றனர். ஆனால், தமிழகத்தில் இப்படி தேவையில்லாமல் முரண்பட்டு நிற்பதாலேயே, முதல்வரால் மாநிலத்திற்கு எந்த நன்மையும் செய்ய முடியவில்லை. மத்திய அரசோடு சுமுகமான உறவை மாநில அரசு பேணினால், நிறைய நன்மைகளை தமிழகத்துக்கு கொண்டு வர முடியும். ஆனால், பிரதமரை சந்திப்பதை திட்டமிட்டு புறக்கணிக்கும் முதல்வர், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அரைகுறை திட்ட அறிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தது என்றதும், அதை வைத்து அரசியல் செய்கிறார். எல்லாவற்றிலும் அரசியல் செய்தால், தமிழக மக்களுக்கான நன்மை தான் புறக்கணிக்கப்படும். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அனுமதிக்காக டில்லி சென்று பிரதமரை சந்திக்கப் போவதாக சொல்கிறார் முதல்வர். பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, அவரை புறக்கணித்து விட்டு டில்லி சென்று அவரை சந்திக்க திட்டமிடுகிறார். இந்த நாடகமெல்லாம் யாரை ஏமாற்ற? மாநில அரசு, தொழில்நுட்ப வல்லுநர்களுடன் மறுபடியும் கலந்து ஆலோசித்து, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சரியான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். டி.ஜி.பி., நியமன விவகாரத்தில், தமிழக அரசு பொய் சொல்கிறது. தமிழக அரசு தேர்வு செய்து அனுப்பும் ஐந்து பேர் பட்டியலில் உள்ள விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, அதில் மூன்று பேர் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அந்த மூன்று பேரில் இருந்து ஒருவரை, டி.ஜி.பி.,யாக முதல்வர் தேர்வு செய்யலாம். ஆனால், அந்த நடைமுறையை கடைப்பிடிக்காத தமிழக அரசு, பொறுப்பு டி.ஜி.பி.,யை வைத்து காலம் தள்ளுகிறது. அதனாலேயே, சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கிறது. எந்த விஷயத்திலும் நுணுக்கமான அறிவை பெற்றிருக்காத உதயநிதியை, தமிழக துணை முதல்வராக நாம் பெற்றிருப்பது மக்களுக்கான சாபக்கேடு. கனிமவளம் வாயிலாக, 100 கோடி ரூபாய் வருமானம் வந்திருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வர வேண்டியதை தி.மு.க.,வினர் தங்கள் சொந்த பாக்கெட்டுக்கு கொண்டு சென்று விட்டு, தமிழக அரசுக்கு வருமானம் என பேசுவது, சுத்த மோசடி. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.