நாமக்கல் : நாமக்கல்லில் இன்று(ஏப்ரல் 8), பா.ஜ., சார்பில் நடக்கும் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி, டி.ஐ.ஜி., உமா தலைமையில் நேற்று நடந்தது.நாமக்கல் லோக்சபா தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன், பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று நாமக்கல்லில் ரோடு ஷோ நடத்துகிறார். சேலத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வரும் ராஜ்நாத் சிங், நாமக்கல் - பரமத்தி சாலை, பி.ஜி.பி., கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார்.மதியம் 12:00 மணிக்கு, நாமக்கல் எம்.ஜி.எம்., தியேட்டர் அருகே கார் மூலம் ரோடு ஷோ நிகழ்ச்சி துவங்கி, பஸ் ஸ்டாண்ட் அருகே முடிகிறது. அங்கிருந்து, மீண்டும் ஹெலிகாப்டரில் திருவாரூர் புறப்பட்டு செல்கிறார்.இதற்காக, சேலம் டி.ஐ.ஜி., உமா தலைமையில் நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், கூடுதல் எஸ்.பி., தனராசு, டி.எஸ்.பி., ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.