பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உடல்நிலை பாதிப்பால் மீண்டும் அட்மிட்
திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, உடல்நிலை பாதிக்கப்பட்டு, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த, 12ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து, தனியாக நடந்து சென்ற, 10 வயது சிறுமியை, மர்ம நபர் மாந்தோப்புக்குள் துாக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்த சம்பவம், தமிழகம் முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில், ஒரு வாரம் சிகிச்சை பெற்று, கடந்த, 19ம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், மீண்டும் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில், வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட தனி அறையில், சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த கும்மிடிப்பூண்டி முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விஜயகுமார் கூறியதாவது: சிறுமியின் உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டு இருப்பதாக, அவரது தாயார் தெரிவித்தார். அவர் கேட்டுக்கொண்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிறுமி பாதித்திருப்பதால், அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உ.பி., வாலிபரிடம் விசாரணை
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனிப்படை போலீசார் வெளியிட்டுள்ளனர். மர்ம நபர் குறித்து, 99520 60948 என்ற மொபைல் போன் எண்ணிற்கு தகவல் தெரிவிப்போருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், ரத்த காயங்களுடன் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் வாலிபர் ஒருவர் வந்தார். இவர் அணிந்து இருந்த உடைகளும், உருவ தோற்றமும் தனிப்படை போலீசாரால் தேடப்படும் மர்ம நபர் போல இருந்தது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகமும், அங்கு பணிபுரியும் போலீசாரும் தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், 23 வயது வாலிபரிடம், தனிப்படை போலீசார் விசாரித்தனர். உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த இவர், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துாரில் வசித்தவாறு, மின்சார ரயிலில் பாப் கார்ன் வியாபாரம் செய்வது தெரியவந்தது. பாலியல் வழக்கில் தேடப்படும் நபர் இவர் இல்லை என, போலீசார் முடிவுக்கு வந்துள்ளனர்.