கோவை: உண்டு உறைவிட பள்ளிகளில், சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களுக்கான உணவு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில், 15 உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்றவர்கள், பெற்றோரை இழந்தவர்கள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட 1,302 மாணவர்கள் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தங்கி கல்வி பயின்று வருகின்றனர். கோவை, விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படும் நான்கு விடுதிகளில், 192 மாணவர்கள் தங்கி அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 9 முதல் பிளஸ் 2 வரை படித்து வருகின்றனர். இந்த பள்ளிகள் மற்றும் விடுதிகள் அனைத்தும் அரசின் நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இங்கு தங்கும் ஒரு மாணவருக்கு உணவு மற்றும் தங்கும் வசதிக்காக மாதம் 2,200 ரூபாயும், இதர செலவினங்களுக்கு150 ரூபாயும் அரசு ஒதுக்குகிறது. மேலும், ஒதுக்கப்படும் நிதியில் இருந்து பணியாளர்களை நியமிப்பது மற்றும் ஊதியம் வழங்குவது தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாகும். இந்நிலையில், இப்பள்ளிகளில் சமையலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் மிகக்குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இப்பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை; சேர்ந்தவர்களும் விரைவில் நின்று விடுகின்றனர். இதன் காரணமாக, மாணவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க முடியாத சூழல் நிலவுகிறது. வேறு வழியின்றி, ஆசிரியர்களே சமைத்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். சில பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதால், மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது. 'இப்பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் அங்கேயே தங்கி, மாணவர்களுக்கான கல்வி மற்றும் இதர பணிகளை கவனிக்க வேண்டும். தலைமை சமையலருக்கு மாதம் 10,400 ரூபாயும், உதவி சமையலருக்கு 8,000 ரூபாயும் ஊதியம் வழங்கப்படுகிறது. 'இந்த ஊதியத்திற்கு மலைப்பகுதி, கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தங்கி பணிபுரிய பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்' என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு நிதியுடன், என்.ஜி.ஓ.,க்களின் பங்களிப்பும் இத்திட்டத்திற்கு அவசியம். சமீபத்தில் இதுதொடர்பாக என்.ஜி.ஓ-.,க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆள் பற்றாக்குறை மற்றும் ஊதியப் பிரச்னைகளை சரிசெய்வது குறித்து விவாதித்துள்ளோம்' என்றார்.