3 மாதங்களுக்கு ஒரு முறை ஜி.எஸ்.டி., செலுத்த மத்திய அரசுக்கு சிறு, குறுந்தொழில்கள் சங்கம் கடிதம்
சென்னை:பெரிய நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டிய பணம் தாமதமாக கிடைப்பதால், சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., செலுத்துவதை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனுமதிக்கும்படியும், சிறு தவறுகளுக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்கும்படியும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து, சங்கத்தின் பொதுச்செயலர் வாசுதேவன் கூறியதாவது: மத்திய அரசு, ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதை வரவேற்கிறோம். சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் வரி செலுத்தும் நடை முறைகளை எளிதாக்க வேண்டும். கவனக்குறைவாக ஏற்படும் சிறு தவறுகளுக்கு, எந்தவித அபராதமும் விதிக்கக்கூடாது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சுமையை குறைக்க, உற்பத்தி துறைக்கான ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., 'ரிட்டன்' தாக்கல் செய்வது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இருப்பதுடன், ஜி.எஸ்.டி., வரி மாதந்தோறும் செலுத்தப் படுகிறது. சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கும் பெரிய நிறுவனங்கள், குறித்த காலத்தில் பணம் தருவதில்லை. அந்நிறுவனங்களிடம் இருந்து, குறைந்தது மூன்று மாதங் களுக்கு பிறகே பணம் கிடைக்கிறது. எனவே, ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் ஜி.எஸ்.டி., வரியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தவும், ஜி.எஸ்.டி., ரிட்டன் தாக்கல் செய்வதை மாதந்தோறும் அனுமதிக்குமாறும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்வது, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மிகவும் பயன் அளிப்பதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.