மத்திய தொகுப்பு மின்சாரம் தமிழகத்திற்கு திடீர் குறைப்பு
சென்னை:தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஒடிசா மாநிலங்களில், மத்திய அரசுக்கு, அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் இருந்து தமிழகத்திற்கு தினமும், 6,700 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், மின் நிலையங்களில் பழுது உள்ளிட்ட பிரச்னைகளால், தினமும் சராசரியாக, 4,500 - 5,000 மெகாவாட் மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த மாதம் முதல் வெயில் சுட்டெரிப்பதால் தினமும், 5,500 மெகா வாட் வரை வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மத்திய தொகுப்பில் இருந்து, 3,800 மெகாவாட் மின்சாரமே வழங்கப்பட்டதால், மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்திற்கு சிரமம் ஏற்பட்டது. மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் தேவையை பூர்த்தி செய்வதில் சூரியசக்தி, காற்றாலை மின் நிலைய மின்சாரத்தை முழுதுமாக பயன்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், பகலில் சூரியசக்தி மின்சாரம் அதிகம் கிடைக்கிறது. எனவே, அந்த மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த அனல் மின்சாரம் குறைக்கப்படுகிறது. இதில், மத்திய அரசின் மின்சாரமும் உள்ளது. வெயிலால் மின் தேவை அதிகரித்தாலும், குறுகிய கால கொள்முதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால், அதை பூர்த்தி செய்வதில் எவ்வித பாதிப்பும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.