எப்படியாவது கோவையை கவர்ந்துவிட தமிழக முதல்வர் முயற்சி செய்கிறார் பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி பேட்டி
கோவை:''கோவையை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்,'' என, தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி கூறினார்.கோவையில் நேற்று நடந்த நுாலகம் மற்றும் அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி: நுாலகம் என்பது அடுத்த தலைமுறைக்கான திட்டம் மட்டும் அல்ல; அது பல்வேறு தலைமுறைக்கான திட்டம். இன்று நிறைய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதில், ஒன்று உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை உள்ள உயர் மட்ட பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிப்பது என்பது.கடந்த, 2021 சட்டசபை தேர்தலுக்கு பின்பு முதல் முறை சட்டசபையில் பேசியபோது, நான் இந்த கோரிக்கையை முன்வைத்தேன். என் தொகுதியில் தங்கநகை தொழிலாளர்கள் அதிகம். கடந்த 6ல், அவர்களை சந்தித்துவிட்டு தற்போது தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.அதுவும் என்னுடைய கோரிக்கைகளில் ஒன்று. 'விஸ்வர்கமா யோஜனா' திட்டம் குறிப்பாக கைவினை கலைஞர்களுக்கு மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படுகிறது. இங்கும் அதை அமல்படுத்த கோரிக்கை வைத்துள்ளேன்.பொதுப்பணித் துறை அமைச்சரிடம் பேசும்போது, 'கோவைக்கு மெட்ரோ ரயில் அவசியம்' என்று ஒப்புக்கொண்டார். முதல்வரிடம் அளித்த கோரிக்கைகளில் இதுதான் முதல் கோரிக்கை. வடக்கு, தெற்கு என்று முதல்வர் பிரிவினைவாதம் பேசாமல், மக்களை திசை திருப்பாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு துணை நிற்க வேண்டும்.முதல்வர் எப்படியாவது கோவையை கவர்ந்து விட வேண்டுமென்று முயற்சி செய்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அவர் கவர்ந்துவிட்டாரா என்பதை வரும், 2026 தேர்தலில் பார்ப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேடையில் 'கல கல!'
நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வரிடம் மேடையில் பேசிய எம்.எல்.ஏ., வானதி, 'விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலங்களை மத்திய அரசிடம், மாநில அரசு ஒப்படைத்துவிட்டது. இன்னும், 11 சென்ட் இடத்தில் இருக்கும் நில உரிமையாளர்களிடம் இருந்து இடத்தை மீட்டு, மத்திய அரசிடம் ஒப்படைத்தால் பணிகள் விரைவில் முடிந்துவிடும்' என்றார்.அப்போது, தலைமை செயலர் முருகானந்தத்தை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். தொடர்ந்து, 'கோவைக்கு அடிக்கடி வந்து போங்க. அப்போது தான் ரோடு போடுகிறார்கள்' என்று வானதி கூறியதும் முதல்வர் உட்பட அனைவரும் சிரித்தனர்.