உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராம ராஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்டதே பாரத தேசம் தமிழக கவர்னர் ரவி பேச்சு

ராம ராஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்டதே பாரத தேசம் தமிழக கவர்னர் ரவி பேச்சு

மயிலாடுதுறை: பாரத தேசம் ராம ராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டது என தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்துார் கிராமத்திற்கு தமிழக கவர்னர் ரவி தனது மனைவியுடன் நேற்று வருகை தந்தார். அவரை கலெக்டர் மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.தொடர்ந்து கம்பர் பிறந்து, வாழ்ந்த கம்பர்மேடு பகுதியை பார்வையிட்டார். தொல்லியல் துறை திருச்சி சரக கண்காணிப்பாளர் அணில்குமார் கம்பர்மேடு குறித்த விபரங்களை எடுத்துரைத்தார். பின்னர் வைணவ 108 திவ்ய தேசங்களில் 10வது தலமான தேரழந்தூர் ஆமருவியப்பன் கோவிலுக்கு சென்று பெருமாளை சேவித்தார். பின்னர், கம்பர் மணி மண்டபம் முன் உள்ள கம்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து மணிமண்டபத்தில் தஞ்சாவூர் மண்டல ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற 'அயோத்தி ராமனும், தமிழ் கம்பனும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டார். கருத்தரங்கிற்கு ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் தெய்வபிரகாஷ் தலைமை தாங்கினார். இணை தலைவர் கண்ணன் வரவேற்றார். கருத்தரங்கில் 'தேரழந்துார் தந்த மகாகவி' என்ற தலைப்பில் பேசிய எழுத்தாளர் ஆமருவி தேவ நாதன் உலக வரைபடத்தில் தேரழுந்தூரை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவாரூர் மத்திய பல்கலையில் கம்பர் இருக்கை அமைக்க வேண்டும். மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் கம்பர் விழா நடத்த கோரிக்கை விடுத்தார். அவரைத் தொடர்ந்து 'அயோத்தி ராமனும், தமிழ் கம்பனும்' என்ற தலைப்பில் நாகப்பட்டினம் சின்மயா மிஷின் ஸ்ரீ சுவாமி ராமகிருஷ்ணானந்தா உரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து தேரழந்துார் கம்பர் கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய சோமசுந்தரம், ராமபத்ராச்சாரியார், சீனிவாசன், பஷீர் அகமது, ரங்கநாதன், சபரி ராஜன், சேஷாத்திரி ஆகிய 7 பேருக்கு கம்பர் விருது வழங்கிய கவர்னர் ரவி பேசுகையில்,' பாரதம் முழுவதும் ராம பக்தி மயமாக காட்சியளிக்கிறது. சங்க இலக்கியங்களில் ராமரின் புகழ் ஒலித்துக் கொண்டே உள்ளது. நமது அரசியல் அமைப்பின் அடிநாதம் ராம ராஜ்ஜிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.ராமரை சாதாரண மக்களிடையே அடையாளப்படுத்தியது கம்பர்தான். அதன் பிறகே ராமாயணம் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. பல்வேறு இனம், மொழி, கலாசாரங்களைக் கொண்ட மனிதர்களை ஒரே குடும்பமாக கொண்ட பாரத தேசத்தின் ஆன்மா ராமர் தான். பாரத தேசம் ராம ராஜ்யத்தை அடிப்படையாகக் கொண்டது.இதனை அடிப்படையாகக் கொண்டே அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ராம ராஜ்ஜியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் கம்பரின் பெருமையை உயிர்பித்தல் அவசியமாகிறது. நாம் நமது மக்களை, மாணவ மாணவியரை, இளம் தலைமுறையினரை கம்பரை பற்றி அறிய செய்ய வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் அகோரம், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எஸ்.பி., மீனா தலைமையில் 520 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.முன்னதாக கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேத்திரபாலபுரம் பகுதியில் கருப்பு கொடி காட்டிய மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், தமிழ் மண் தன்னுரிமை இயக்கத்தின் பேராசிரியர் ஜெயராமன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் உள்ளிட்ட 52 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை