தமிழகம் எல்லாவற்றிலும் வழிகாட்டும் மாநிலம்: சிவசங்கர்
பெரம்பலுார்: ''தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை முடக்குவது, சந்தேகத்தை வலுப்படுத்துவதாகத் தான் அமையும்,'' என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். பெரம்பலுாரில் அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இது போன்ற நேரத்தில், தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை முடக்குவது, சந்தேகத்தை வலுப்படுத்துவதாகத் தான் அமையும். அதனால் தான், டிஜிட்டல் ஆவணங்கள் அனைத்தையும், மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் தொடரும். அது தான், நம் மாநிலத்திற்கு ஏற்றது. இது ஒரு சமத்துவத்தை நோக்கி செல்லும் பயணம். கல்வியிலே பின்தங்கி இருப்பவர்களையும் மேலே கொண்டு வர வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று சொல்லி ஒதுக்கித்தள்ளி, வீட்டிற்கு அனுப்பி வைப்பது அரசின் வேலையல்ல. எனவே தான், தமிழக முதல்வர், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு கிடையாது என்று அறிவித்து இருக்கிறார். நம் மாநில கல்விக் கொள்கையை, மற்ற மாநிலங்களும் பின்பற்றும். தமிழகம் எல்லாவற்றிலும் வழிகாட்டும் மாநிலம். அந்த வகையில், நீட் தேர்விலும் வழிகாட்டும் மாநிலமாக இருக்கும். இவ்வாறு கூறினார்.