உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜவுளி உற்பத்தி சந்தை மதிப்பு 2030ல் 29 லட்சம் கோடியாகும்:அமைச்சர் கிரிராஜ் சிங்

ஜவுளி உற்பத்தி சந்தை மதிப்பு 2030ல் 29 லட்சம் கோடியாகும்:அமைச்சர் கிரிராஜ் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அண்டை நாடான வங்கதேச அரசியல் சூழலால், இந்திய ஜவுளி துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை,'' என, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.சென்னை தரமணியில் உள்ள பேஷன் டெக்னாலஜி கல்லுாரியில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி:இந்தியாவில் ஆடைகள் வடிவமைப்பில், ஏழு கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தரமணி நிறுவனம் மாணவ - மாணவியரை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. நம் நாட்டில், 130 கோடி மக்களுக்கு, ஆடையானது அடிப்படை உரிமையாக இருப்பதால், இத்துறைக்கு மத்திய அரசு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது. இதற்காக, 'விஷன் நெக்ஸ்ட்' என்ற திட்டம் துவக்கப்பட்டு, அதன் வாயிலாக ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் தரப்படுகிறது.விஷன் நெக்ஸ்ட், மேக் இன் இந்தியா திட்டம் வாயிலாக, ஆடைகள் வடிவமைப்பில் மேலை நாடுகளை விட முன்னேறி வருகிறோம். நம் நாட்டில் ஜவுளி உற்பத்தி சந்தை மதிப்பு, 14 லட்சத்து, 78 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக உள்ளது. இது, 2030ல், 29 லட்சத்து, 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும். தற்போது, ஜவுளி துறையில், 4.6 கோடி பணியாளர்கள் உள்ள நிலையில், 2030க்குள், 6 கோடி பேராக உயரும்.விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. தமிழகம் ஜவுளி துறையில் முன்னேறிய மாநிலமாக உள்ளதுடன், முக்கிய பங்காற்றி வருகிறது. அண்டை நாடான வங்கதேச அரசியல் சூழலால், இந்திய ஜவுளி துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்கு ஜவுளி உற்பத்தியில், 45 லட்சம் பேர் தான் உள்ளனர். இங்கு பல மாநிலங்களில் ஜவுளி உற்பத்தி பணியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டந்தோறும் மினி ஜவுளி பூங்கா

சென்னை வந்துள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை, தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா, தரமணியில் நேற்று சந்தித்து பேசினார்.அப்போது, விருதுநகர் மாவட்டத்தில், பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்கா பணிகளை விரைவாக துவக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், மினி ஜவுளி பூங்காக்களை அமைக்க வேண்டும்.கரூர், திருப்பூர், சேலம், ஈரோடு, நாகை மாவட்டங்களில், ஜவுளி துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, தமிழகத்திலுள்ள திறன் மிக்க இளைஞர்களுக்கு, அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று, ராஜா வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தை தொழில் நுட்ப ஜவுளிக்கான மையமாக மாற்றுவதில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மத்திய அமைச்சரிடம், ராஜா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி