உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லை மேயர் மீது சொந்த கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் செயல் இழக்க வைக்க தங்கம் தென்னரசு தீவிர முயற்சி

நெல்லை மேயர் மீது சொந்த கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் செயல் இழக்க வைக்க தங்கம் தென்னரசு தீவிர முயற்சி

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க., மேயர் சரவணன் மீது அக்கட்சியினரே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை செயல் இழக்க செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர முயற்சி செய்து வருகிறார்.மேயர் சரவணன் எந்த வார்டுகளுக்கும் பணிகளைப் பிரித்து தரவில்லை. சுமூகமாக நடந்து கொள்ளவில்லை என கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க., கவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்டு கடந்தாண்டு டிச., 6ல் கமிஷனர் தாக்கரேவிடம் வழங்கினர். இன்று( ஜன.,12) மாநகராட்சி மைய கூட்ட அரங்கில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கிறது. 55 கவுன்சிலர்களில் நான்கு பேர் அ.தி.மு.க.,வினர். மற்ற அனைவரும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர்.இதற்கிடையில் வாக்கெடுப்பு கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு திருநெல்வேலியில் கவுன்சிலர்களை சந்தித்து சமாதான பேச்சு நடத்தி கோரிக்கை வைத்தார். தி.மு.க., கவுன்சிலர்கள் 12 பேர் பங்கேற்காமல் இருந்தால் போதும். அவர்களை அழைத்து வரும்படி தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., அப்துல் வகாபிடம் அறிவுறுத்தியிருந்தார்.நேற்று அப்துல்வகாப் உடன் துணை மேயர் ராஜு, நான்கு மண்டல தலைவர்கள் உட்பட 23 கவுன்சிலர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தங்கம் தென்னரசுவின் சொந்த ஊர் மல்லாங்கிணர் சென்று பேசினர்.மேயர் தேர்வு நடந்தால் போட்டியிட வாய்ப்புள்ள ஒருவரது ஏற்பாட்டில் சுமார் 25 தி.மு.க.,கவுன்சிலர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்களா என கேள்வி எழுந்துள்ளது. மேயருக்கு எதிரான வாக்கெடுப்பு வெற்றிபெற குறைந்தது 44 கவுன்சிலர்கள் தேவை என்பதால் இனி தீர்மானம் நிறைவேற வாய்ப்பு இல்லை என கட்சியினர் தெரிவித்தனர்.

தி.மு.க.விற்கு நெருக்கடி

பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க., தலைவர்களுக்கு எதிராகவே தி.மு.க., கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரும் நிலை உள்ளது. கடந்த மாதம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடைசி நேரத்தில் தலைவி உட்பட தி.மு.க., கவுன்சிலர்கள் கொடைக்கானல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டதால் அவர் பதவி தப்பித்தது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியிலும் தி.மு.க., தலைவர் ராமலட்சுமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கும் இதே போல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் லோக்சபா தேர்தல் வரையிலும் தி.மு.க.,வினரை கோஷ்டி பூசல் இல்லாமல் கொண்டு செல்ல தலைமை மற்றும் அமைச்சர்கள் சமரசம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ