சென்னை : 'தமிழகத்தில் இதுவரை, ஒரு நடுகல் கூட பாதுகாக்கப்பட்ட சின்னமாக அரசால் அறிவிக்கப்படவில்லை' என, தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், சங்க காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான 100 ஆண்டுகளுக்கும் மேலான நடுகற்கள், நினைவு கற்கள் மற்றும் வீரக்கற்கள் உள்ளன. ஆனால், அவற்றில் ஒன்று கூட, 'பாதுகாக்கப்பட்ட சின்னம்' என இதுவரை அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, ராமாபுரத்தைச் சேர்ந்தவர் ஆதித்ய சோழன். த.வெ.க.,வின் சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை செயலரான இவர், தமிழகத்தில் உள்ள நடுகற்கள் குறித்த தகவல்களை அறியும் பொருட்டு, தகவல் பெறும் சட்டத்தின் கீழ், கடந்த ஆகஸ்ட் மாதம், தொல்லியல் துறை பொதுத்தகவல் அலுவலருக்கு விண்ணப்பித்திருந்தார். தொல்லியல் துறை துணை இயக்குநரும், பொதுத்தகவல் அலுவலருமான சிவானந்தம் அளித்த பதிலில், 'இதுவரை இத்துறையால், நடுகல், நினைவு கற்கள், வீரக்கற்கள் ஆகியவை, பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்படவில்லை' என கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து, மனுதாரர் ஆதித்ய சோழன் கூறியதாவது:
சாமானிய மக்களின் பண்பாடு மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் இந்த சின்னங்களை பாதுகாக்க, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 'தமிழர்களை தலைகுனிய விடமாட்டோம்' என கூறும் தி.மு.க., அரசு, அவர்களின் வீரத்தை போற்றும் நடுகற்களை, கண்ணுக்குத் தெரிந்தே அழியவிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர் வரலாற்றை பாதுகாக்க, தமிழக அரசு தவறியுள்ளது. இச்செயல், தமிழர்களுக்கு இழைக்கும் அநீதி. எனவே, தமிழர் வரலாற்றைக் காக்கும் வகையில், நடுகற்களை பாதுகாக்கப்பட்ட சின்னமாக, சட்டசபையில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.