சென்னை:வணிக வரித்துறை செயலர் அறிவிப்பு:அதிக கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய வருவாய் மாவட்டங்களில், முதன்மை வணிகஇடங்களை கொண்டுள்ள வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி.ஆர்., - 3பி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டிய நாள், 2023 டிச., 20ம் தேதியில் இருந்து, வரும், 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள வணிகர்கள், நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி.ஆர்., படிவத்தை நீட்டிக்கப்பட்ட வரும், 10ம் தேதி வரை தாக்கல் செய்ய தாமத கட்டணம், வட்டி செலுத்த வேண்டியதில்லை.மேலும், மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில், முதன்மை வணிக இடங்களை கொண்டுள்ள வணிகர்கள், 2022 - 23ம் நிதியாண்டிற்கான படிவம் ஜி.எஸ்.டி.ஆர்., - 9 மற்றும் படிவம் ஜி.எஸ்.டி.ஆர்., - 9 சி ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டிய நாள், 2023 டிச., 31ல் இருந்து, வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எளிய முறையில்ஆவண பதிவு
சென்னையில், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், பதிவு துறை ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் செயலர் ஜோதி நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, தணிக்கை இழப்பு மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட வேண்டிய தொகைகளை விரைவாக வசூலிக்குமாறும், சார் - பதிவாளர் அலுவலகங்களில் உரிய காரணம் இல்லாமல், நிலுவையில் வைத்துள்ள ஆவணங்களை விடுவிக்குமாறும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பொது மக்கள் எளிய முறையில் ஆவணப்பதிவு மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.