வேலூர் : வேலூரில், பெருங்கற்கால கல்திட்டைகள் மற்றும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த போகலூர் கிராம மலைப்பகுதியில், தரைமட்டத்திலிருந்து, 500 மீ., உயரத்தில், வரலாற்றுக்கு முந்தைய கற்காலத்தில், மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் கிடைத்த, 10 கல்திட்டைகள், 6 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டிருந்தன. இறந்தவர்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட இக்கல்திட்டைகள் பலவும், சிதைந்த நிலையில் உள்ளன.
இக்கல்திட்டைகளுக்கு அருகில் உள்ள குகையில், 4க்கு 4 அடியில், பாறை ஓவியங்கள் உள்ளன. இதை வரைந்தவர்கள், வேட்டையாடும் நாடோடிகளாக இருந்திருக்கலாம். இந்த ஓவியத்தில், விலங்குகள், பறவை, குதிரை மீது உட்கார்ந்திருக்கும் மனிதன், பறவை முகம் கொண்ட மனிதன் நடனமாடுவது என, அனைத்துச் சித்திரங்களும், வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன. இதைக் கண்டுபிடித்த தொல்லியல் ஆய்வாளர் மகேந்திரன் கூறுகையில், 'மேற்சொன்ன கல்திட்டைகளும், பாறை ஓவியங்களும், 3,000 ஆண்டுகள் பழமையானவையாக, அதாவது, பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்' என, கருத்து தெரிவித்தார்.