வடலுார்: ''எத்தனை தடை வந்தாலும் வடலுாரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்,'' என, அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பா.ம.க., ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது.கடலுார் மாவட்டம், வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபையில், 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.அதன்படி, வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபையில், 100 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். வடலுார் சத்தியஞான சபையில் நடந்த விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:வள்ளலார் சர்வதேச மைய விவகாரத்தை சிலர் அரசியல் ஆக்குகின்றனர். வடலுார் சத்திய ஞான சபை அமைந்துள்ள பெருவெளியில் உள்ள 72 ஏக்கரில், 3.42 ஏக்கர் மட்டுமே சர்வதேச மையத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.வள்ளலாரின் கொள்கையை உலகளவில் கொண்டு செல்ல இங்கு தியான மண்டபம், தகவல் மையம், கலையரங்கம், மின் நுாலகம், முதியோர் இல்லம், வெளிநாட்டு மாணவர்கள் தங்கி ஆய்வு செய்ய ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.சர்வதேச மையம் அமைந்தால், நகரின் கட்டமைப்பு மாறும். பொருளாதார வசதி மேம்படும். இந்த சர்வதேச மையம் அமைப்பது குறித்து மூன்று முறை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, முடிவு செய்துள்ளோம்.விமர்சிப்பவர்கள் சொல்லும்படி ஆட்சி நடத்த தேவையில்லை. எத்தனை தடை வந்தாலும் சர்வதேச மையம் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
பா.ம.க., ஆர்ப்பாட்டம்
வள்ளலார் சர்வதேச மையத்தை பெருவெளியில் அமைப்பதால், ஜோதி தரிசன விழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால் மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக, சபை நிர்வாக அதிகாரியிடம் மனுவும் அளிக்கப்பட்டது.இந்நிலையில், எதிர்ப்பை மீறி, சர்வதேச மையம் அமைக்கும் பணி துவக்கப்பட்டதை கண்டித்து, வடலுார் பஸ் நிலையம் அருகில் பா.ம.க., மாவட்டச் செயலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பா.ம.க., போராட்டம் காரணமாக, சத்திய ஞானசபை வளாகத்தில் எஸ்.பி., ராஜாராம் தலைமையில் 1,000த்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.