| ADDED : டிச 05, 2025 08:42 PM
சென்னை: எதிர்க்கட்சியாக இருக்கும்போது பயிர்களுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30,000 கேட்டுவிட்டு தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் ரூ.8,000 மட்டும் வழங்கி யதுமே தங்களது டெல்டாகாரன் முகச்சாயம் வெளுத்துவிட்டது என முதல்வர் ஸ்டாலினை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடி உள்ளார். அவரது அறிக்கை: பச்சைத் துண்டு போடும் போலி விவசாயி நானல்ல என எப்போதும் முதல்வர் ஸ்டாலின் முழங்குகிறார். கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு வெறும் ரூ.8,000 மட்டுமே வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாமல் ஏற்கனவே விளைவித்த பயிரைப் பறிகொடுத்ததோடு, தற்போதைய கனமழையால் விளையும் பயிரையும் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் விவசாயிகளின் வயிற்றில் இழப்பீடு என்னும் பெயரில் இடியை இறக்கலாமா?எதிர்க்கட்சியாக இருக்கும்போது பயிர்களுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30,000 கேட்டுவிட்டு தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் ரூ.8,000 மட்டும் வழங்கியதுமே தங்களது டெல்டாகாரன் முகச்சாயம் வெளுத்துவிட்டது. தங்களது வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இந்த ரூ.8,000, யானைப் பசிக்குச் சோளப்பொரி போன்றது என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.தமிழக விவசாயிகளின் நலனில் துளியும் அக்கறையிருந்தால், தலைநகரில் ஏசி அறையில் உட்கார்ந்து இழப்பீடு குறித்து ஆலோசிக்காமல், டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று களத்தில் இறங்கி விவசாயிகளுடன் கலந்தாலோசித்து இழப்பீடு வழங்குங்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.