பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: ஹிந்துக்கள் சிறுபான்மையாக வசிக்கும் வங்கதேசத்தில், அரசின் துணையுடன் ஹிந்துக்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தீபு சந்தர் என்ற இளைஞரை அடித்து துன்புறுத்தி, தீயிட்டு கொளுத்தி, சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். ஹிந்துக்களின் வீடுகள், கோவில்கள் இடிக்கப்படுகின்றன. ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. வங்க தேசத்தை இந்திரா காந்தி உருவாக்கிய போது, 36 சதவீத ஹிந்துக்கள் அங்கு இருந்தனர். தற்போது, 7 சதவீதமாக குறைந்துள்ளனர். மத்திய அரசு, ஐ.நா. வாயிலாக அல்லது அல்லது ராணுவ நடவடிக்கை எடுத்தோ அமைதியை நிலை நாட்ட வேண்டும். சித்திரை 1ம் தேதிதான் தமிழர்களுக்கு புத்தாண்டு. தமிழர்களுக்கு, ஒரு நாள் துவங்குவது என்றால் அது சூரிய உதயத்தில்தான் துவங்கும். ஆனால், ஆங்கில புத்தாண்டு என்று கூறி, நள்ளிரவு மது விருந்து, பாட்டில் உடைப்பது என, கலாசார சீரழிவுடன், பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை கூட ஏற்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் கலாசாரம் சார்ந்த விளையாட்டுகள், நிகழ்ச்சிகளுக்கு விதிமுறைகளை வகுத்து, தடை செய்வதை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். சனாதனத்தை, ஹிந்து சமயத்தை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வேல், கிரீடம் பெற்றுக்கொண்டு இரட்டை வேடம் போடுகிறார். கடந்த முறை திருப்பரங்குன்றம் வந்தபோது, நெற்றியில் இருந்த விபூதியை அழித்துவிட்டு, வியர்வையை துடைத்ததாக நாடகமாடினார். தற்போது, திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றிவிட்டால், மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டு விடுமா என விதண்டாவாதம் பேசுகிறார். எனில், மலைமீது சந்தனக்கூடு விழா நடத்திவிட்டால், நாட்டில் எல்லாம் சரியாகிவிடுமா? கிறிஸ்துவ மிஷினரிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் திருமாவளவனின் வி.சி.க. ஒரு கிறிஸ்துவ கட்சியாகி விட்டது. தமிழகத்தில் வன்முறையை துாண்டி வரும் வி.சி.க. ஒரு தடை செய்யப்பட வேண்டிய அமைப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.