உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைத்து அரசு பிறப்பித்த சுற்றறிக்கை ரத்து

வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைத்து அரசு பிறப்பித்த சுற்றறிக்கை ரத்து

சென்னை:கடந்த ஆண்டு மார்ச் 30ல், பத்திரப்பதிவு ஐ.ஜி., பிறப்பித்த சுற்றறிக்கையில், சொத்துக்களுக்கான மாற்றப்பட்ட வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'கிரெடாய்' அமைப்பு மற்றும் இரு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:வழிகாட்டி மதிப்பை மாற்றி அமைக்கும் போது, நிபுணர் குழுவின் அறிக்கை பெற வேண்டும். மதிப்பீட்டை நிர்ணயிப்பதற்கு முன், பொது மக்களிடம் இருந்து ஆட்சேபனைகளை பெறுவது உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண் டும். ஆனால், அந்த நடை முறையை பின்பற்றவில்லை.சந்தை மதிப்பு, வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வழக்கை பொறுத்தவரை, சுற்றறிக்கை அனுப்பும் முன், சட்டப்பூர்வ அம்சங்களை அரசு பின்பற்றவில்லை.எனவே, பத்திரப்பதிவு ஐ.ஜி., பிறப்பித்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. விதிகளின்படி, உரிய நடைமுறையை பின்பற்றி, வழிகாட்டி மதிப்பை மாற்றிக் கொள்ள அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் வரை, 2017ல் வகுக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை அரசு பின்பற்ற வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:அரசின் நிர்வாக முடிவுகளை, சட்டத்தில் கூறியுள்ள நடைமுறையை பின்பற்றியே அமல்படுத்த வேண்டும். பொது நலனையே முன்னிலைப்படுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை, பொது நலனை பாதுகாப்பது தான். பொது மக்களை பாதிக்கும் எந்த கொள்கை முடிவையும், நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்காது. அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவுக்கு, கொள்கை முடிவு என்ற போர்வையில் பாதுகாப்பு கிடைக்காது.எனவே, பத்திரப்பதிவு ஐ.ஜி.,யின் சுற்றறிக்கையை தனி நீதிபதி ரத்து செய்ததை உறுதி செய்கிறோம். மதிப்பீட்டுக்குழு சட்ட நடைமுறையை பின்பற்றி, வழிகாட்டி மதிப்பை திருத்தும் வரை, 2017 ஜூனில் அமலுக்கு வந்த வழிகாட்டி மதிப்பை அரசு பின்பற்ற வேண்டும்.சுற்றறிக்கை பிறப்பித்த தேதியான, 2023 மார்ச் 30 முதல், இந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதி வரையில், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. சுற்றறிக்கை அடிப்படையில், ஏற்கனவே செலுத்திய முத்திரைக் கட்டணத்தை திரும்ப பெற உரிமை இல்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ