| ADDED : மார் 10, 2024 01:00 AM
உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
ப. ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வேம்பார்பட்டியைச் சேர்ந்தவர், 24 வயதுடைய கூலித் தொழிலாளி பாண்டி. இவருக்கும், வளர்மதி என்ற 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் பஸ்சில் சென்றபோது, பாண்டி, போதையில் இருந்ததால் மனைவியுடன் தகராறு செய்து, அவரை பஸ்சிலிருந்து கீழே தள்ளிவிட்டார். ஏழு மாத கர்ப்பிணியான வளர்மதி இறந்துவிட்டார்.இது போன்ற சம்பவங்கள், இப்போது அடிக்கடி நடக்கின்றன.குடிபோதைக்கு ஆளான ஒருவனால், இரு உயிர்கள் பலியாகி விட்டன.இந்தக் குடியால், எத்தனையோ குடும்பங்கள் பாழாகிக் கொண்டிருக்கின்றன. விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களும் பெருகி விட்டன.டீ குடிப்பது போன்று, மது குடிக்கும் பழக்கம் பெருகி விட்டது. இதனால், தமிழக மக்களின் பணித்திறன் பாதிக்கப்படுகிறது. நாட்டுக்கு கேடான விஷயத்திற்கு அரசு துணைபோகிறது என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.வருமானத்துக்கு வல்லுனர்கள் யாராவது மாற்று ஏற்பாட்டை, அரசுக்கு சொல்லிக் கொடுங்களேன், ப்ளீஸ்!