சென்னை: ''உழைக்கும் வர்க்கத்திற்கு போராடுவதாக வேஷம் போட்டு, உண்டியலில் இருந்து பெட்டிக்கு மாறிய, கம்யூனிஸ்ட் கட்சியினர், பிரதமர் குறித்து விமர்சிக்க தகுதியற்றவர்கள்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை: உழைக்கும் வர்க்கத்திற்கு போராடுவதாக வேஷம் போட்டு, உண்டியலில் இருந்து பெட்டிக்கு மாறிய கம்யூனிஸ்ட்டுகளுக்கு, தொழிலாளர்களுக்கு ஆதரவாக புது சட்டங்களை கொண்டு வந்த, பிரதமரை விமர்சிக்க தகுதி இல்லை. நாட்டில் தொழிலாளர் நலனுக்காக, மத்திய அரசு நான்கு புது சட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், வழக்கம் போல், தொழிலாளர்களின் தோழன் எனக் கூறி, அதை அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தும் கம்யூனிஸ்ட்டுகள், உடனே அதை எதிர்க்கின்றனர். நான்கு தொழிலாளர் சட்டமும், முதலாளிகளுக்கு ஆதரவானது என்கின்றனர். உண்மையில், குறைந்தபட்ச ஊதியம், நியமன கடிதம், பாதுகா ப்பு நெறிமுறை போன்றவை, தொழிலாளர்களுக்கு கட்டாயம் என்கிறது புது சட்டம். இதை எதிர்ப்பவர்கள், பணி நீக்கத்தை எளிதாக்கிவிடும் என மற்றொரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். பெரு நிறுவனங்களுக்கு தேவையான அரசு அனுமதியில் எந்ந மாற்றமும் இல்லை. அதேபோல், பேச்சுவார்த்தையின் அங்கீகரிப்பு வாயிலாக, தொழிலாளர்களின் பங்களிப்பும், விவாதங்களுக்கும் வலிமை பெற, சட்டம் இடமளித்துள்ளது. மேலும், சமூக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்கின்றனர். ஆனால், சமூக பாதுகாப்பு வரலாறு காணாத அளவில் விரிவடைந்துள்ளன. இச்சட்டங்களின் வாயிலாக பெண் தொழிலாளர்கள், புது பாதுகாப்பை பெறுகின்றனர். ஏற்கனவே இருந்த 44 சட்டங்கள், நான்காக எளிமையாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை அழுத்தும் அதிகாரிகளின் போக்கு, லஞ்சம், யூனியன் மற்றும் இடைத்தரகர் வசமிருந்து, தொழிலாளர்களை சட்டங்கள் பாதுகாக்கிறது. பி.எப்., - இ.எஸ்.ஐ., வசதிகள், ஊதியத்துடன் கூடிய விடுமுறை என, தொழிலாளர்களுக்கு பக்க பலமான சட்டத்தை, கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பது தொழிலாளர்கள் நலனிற்கு அல்ல. மாறாக, டிஜிட்டல் வெளிப்படைத்தன்மை, அவர்களின் யூனியன் கட்டுப்பாட்டை குறைப்பதால் தான் எதிர்க்கின்றனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.