UPDATED : பிப் 11, 2024 06:52 AM | ADDED : பிப் 10, 2024 11:54 PM
சென்னை:பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், பழைய குற்றவாளிகளின் விபரங்கள் சேகரிக்கப்படும் நிலையில், பெல்ஜியம் நாட்டு கம்ப்யூட்டர் ஐ.பி., முகவரி யில் இருந்து மிரட்டல் வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சென்னையில், இரண்டு நாட்களுக்கு முன், 13 தனியார் பள்ளிகளுக்கு இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் புரளி என்பது தெரியவந்தது.இந்த விவகாரத்தில், குற்றவாளி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதால், மிரட்டல் விடுத்த நபர் யார்; எங்கிருந்து மிரட்டல் வந்தது போன்ற விபரங்களை சேகரிக்க முடியவில்லை.இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர். ஏற்கனவே, இதே பாணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் பட்டியலை சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக, தொழில்நுட்பங்களை பயன்படுத்திய குற்றவாளிகளின் விபரங்களை, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பதிவான வழக்குகள் அடிப்படையில் திரட்டி வருகின்றனர்.இதற்கிடையே, பெல்ஜியம் நாட்டில் இருப்போர் பயன்படுத்திய கம்ப்யூட்டர் ஐ.பி., முகவரியில் இருந்து, இ - மெயில்கள் வந்திருப்பதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.