உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காக்கா ஆழிகள் அழிப்பு திட்டத்திற்கு ரூ.90 கோடி விடுவிக்க தீர்ப்பாயம் உத்தரவு

காக்கா ஆழிகள் அழிப்பு திட்டத்திற்கு ரூ.90 கோடி விடுவிக்க தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை:'காக்கா ஆழிகளை அழிக்கும் திட்டத்திற்கு, நீர்வளத்துறை முன்மொழிந்த, 90 கோடி ரூபாய் நிதியை உடனே விடுவிக்க வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 'மீன் வளத்தை நாசமாக்கும் சிப்பி வகையைச் சேர்ந்த சிறிய கடல்வாழ் உயிரினமான, 'தென் அமெரிக்க மஸ்ஸல்' எனப்படும், 'காக்கா ஆழி'கள் வெளியிடும் துர்நாற்றம் உடைய கசடுகளால், இறால்கள், மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. 'இதனால், பழவேற்காடு ஏரி போன்ற உப்பங்கழிகளை நம்பியிருக்கும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அவற்றை அழிக்க உத்தரவிட வேண்டும்' என, குமரேசன் சூளுரன் என்பவர், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் அப்ரோஸ் அகமது ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசு சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர், 'கடந்த ஜூலை, 23ம் தேதி மாநில சதுப்பு நில ஆணையம், மீன்வளம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில் காக்கா ஆழிகளை அழிக்க, 90 கோடி ரூபாயில் துார்வாரும் பணிகளை மேற்கொள்ளும் திட்டம் முன்மொழியப்பட்டது' என்று தெரிவித்தார் . ஆனால், இதுவரை நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் துவக்கப்படவில்லை என, மாநில சதுப்பு நில ஆணையம் தெரிவித்து உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசின் தலைமை செயலர் தலையிட்டு, 90 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் துார்வாரும் பணிகளை, தாமதமின்றி துவக்க முடியும். பணிகள் துவக்கப்பட்டதும், அவை தாமதமின்றி நடப்பதை, சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, செப்.,1ல் நடக்கும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி