சென்னை: 'சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.'மிக்ஜாம்' புயலால் பெய்த கன மழையால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதே மிக முக்கியமான காரணம்' என, நம் நாளிதழில் டிசம்பர் 6, 7, 14ம் தேதிகளில் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், நான்கு மாவட்டங்களிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்; அவற்றில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து, சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், பல்வேறு புள்ளி விபரங்கள் இடம் பெற்றுள்ளன.தமிழக நீர்வளத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு, அகற்றுவது மிகப்பெரிய நடைமுறை. இதற்காக ஒரு ஆண்டில் குறைந்தது மூன்று மாதங்களாவது தேவைப்படும்' என்றார்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, தமிழக நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.இந்தப் பணிகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கான செயல் திட்டத்தை, அடுத்த விசாரணை தேதியான ஏப்ரல் 10க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.