உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமருடன் உதயநிதி சந்திப்பு கேலோ இண்டியாவுக்கு அழைப்பு

பிரதமருடன் உதயநிதி சந்திப்பு கேலோ இண்டியாவுக்கு அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலை நேரடியாக சந்தித்து, 'கேலோ இண்டியா' விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவில் பங்கேற்க வரும்படி, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்தார்.அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் டில்லி வந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய உதயநிதி நேற்று மாலை, 5:00 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க கிளம்பினார்.லோக்கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் நடந்த சந்திப்பு, 20 நிமிடங்கள் வரை நீடித்தது. அப்போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா மட்டும் உடன் இருந்தார். எம்.பி.,க்கள் யாரையும் அழைத்துச் செல்லவில்லை.

உறுதியளித்த பிரதமர்

பிரதமருடனான சந்திப்பை முடித்ததும், நேராக ஜன்பத் சாலையில் உள்ள நம்பர், 10 இல்லத்திற்கு சென்ற உதயநிதி, அங்கு காங்., முன்னாள் தலைவர்களான சோனியா, ராகுலை சந்தித்தார். சில நிமிடங்கள் மட்டுமே அந்த சந்திப்பு நீடித்தது. அப்போது, எம்.பி.,க்களும் உடனிருந்தனர்.ஜன்பத் இல்லத்திலிருந்து வெளியே வந்ததும், நிருபர்களிடம் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:தமிழகத்தில் கேலோ இண்டியா விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாய்ப்பு தந்திருந்தார். இதையடுத்து, அவரை அந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்க நேரம் கேட்டிருந்தேன்.அதற்காக அவரைச் சந்தித்தேன்; அவரும் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார். சமீபத்திய கனமழை காரணமாக, தமிழகத்தின் துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.நிவாரண நிதி குறித்து, பிரதமர் திருச்சிக்கு வந்திருந்த போது, ஏற்கனவே நேரில் முதல்வர் வேண்டுகோள் வைத்திருந்தார். அதை, அவரிடம் நினைவுபடுத்தும்படி முதல்வர் கூறியிருந்ததை எடுத்துக் கூறினேன்.கண்டிப்பாக செய்து தருவதாக பிரதமர் கூறினார். மேலும், 19ல் நடைபெறவுள்ள, கேலோ இண்டியா விளையாட்டு போட்டியின் துவக்க விழாவுக்கு, அவர் வருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

நலம் விசாரிப்பு

இதன்பின் சகோதரர் ராகுலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அப்போது, வரும் லோக்சபா தேர்தல் குறித்து அவர் பேசினார். என்ன பேசினார் என்பதை இப்போது கூற முடியாது.மேலும், அவரது பாதயாத்திரையை மணிப்பூரிலிருந்து துவங்கப் போவதாக கூறினார். ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம்.மற்றபடி யாத்திரை மேற்கொள்ள உள்ளதால், கேலோ இண்டியா நிகழ்ச்சிக்கு அவர் வரப்போவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.-- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

INNER VOICE
ஜன 07, 2024 07:29

தமிழகத்திற்கு நிதி உதவி அப்பப்போ கேப்பிங்க, அவரும் கோடிக்கணக்கில் தமிழக மக்கள் நல்வாழ்விற்காக நிறைய கொடுப்பர். அப்புறம் இங்கு வந்து மத்திய அரசு, ஒண்ணுமே தராம ஏமாத்திக்கிட்டே இருக்கு என்று தமிழ் மக்களுக்கு சொல்வீர்கள். தமிழ் மக்களும் உண்மை என்று நினைத்து உங்களுக்கு வோட்டு போட்டு ஏமாந்து போவார்கள். திமுக மந்திரிகள் வாய் சொல்லில் வீரரடி. அடுத்த தேர்தலில் ஆவது மக்கள் இதை புரிந்து கொண்டு திமுகவுக்கு வோட்டு போடமாட்டார்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை