சேலம் : சேலத்துக்கு கடத்தி வரப்பட்ட, 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அபினை, பறிமுதல் செய்த, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இருவரை, கைது செய்தனர். சேலம் வழியாக, போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, சேலம் போதைப்பொருள் நுண்ணறிவு, டி.எஸ்.பி., தலைமையில், போலீசார் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திருவாக்கவுண்டனூர் பை-பாஸ் ரவுண்டானா பகுதியில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கம்மாள் லாரி ஒர்க்ஷாப் அருகே, பைக்கில் வேகமாக வந்த இருவரை மடக்கி சோதனையிட்டதில், சாக்கு பையில், 4 கிலோ அபினை மறைத்து கடத்திச் செல்வது தெரிந்தது. விசாரணையில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அடுத்த, கொலகாட்டூபுதூர் கிராமத்தைச் சேர்ந்த வேலவன், 31, ரெங்கசாமி, 39, என்பது தெரிந்தது. உத்திரப்பிரதேசம், பரேலி என்ற இடத்திலிருந்து, 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 4 கிலோ அபினை கடத்தி வந்ததாக இருவரும் தெரிவித்தனர். அபினை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.