உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உரத்த சிந்தனை:என்று தீரும் இந்த இருள்?அப்சல்

உரத்த சிந்தனை:என்று தீரும் இந்த இருள்?அப்சல்

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களை முன்னேற்றுவதே, தங்கள் ஒரே குறிக்கோள் என்று, சுதந்திரம் கிடைத்ததிலிருந்து, இந்திய அரசியல்வாதிகள் கூப்பாடு போட்டு வருகின்றனர். 'கர்பி ஹடாவோ' - 'ஏழ்மையை விரட்டுவோம்' என்பது, இந்திராவின் பிரபலமான கோஷம்.

ஆனால், வறுமைக் கோடு அழிந்ததா இல்லை, ஒரு சிலருக்கு மட்டுமே வளமைக் கோடு கொழிக்கும் நிலைக்கும் கொண்டு சென்றுள்ளதா என்பதை, நாம் அவதானித்தால், ஆச்சரியமே மிஞ்சுகிறது.முப்பதாயிரம் கோடி செலவு செய்து, காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளை, தலைநகர் டில்லியில் நடத்தும் இந்திய அரசு, 'இந்தியா ஏழை நாடு அல்ல' என்று உலகிற்கு பறைசாற்ற முயன்றதா?இந்தியாவுக்கு, இதுபோன்ற விளையாட்டு போட்டிகள், விழாக்கள் எல்லாம், சுடுகாட்டுக்கு சுண்ணாம்பு அடிப்பது போல தான். உண்மையில் இந்த விளையாட்டிலும், ஐ.பி.எல்., போலவே, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், ஊழலில் கரைந்துள்ளது. இடையில் உள்ளவர்களும், அரசியல்வாதிகளும் கொள்ளையடித்துள்ளனர்.

விளைவு விளையாட்டு வீரர்கள் தங்கும் மாதிரி கிராமத்தில், கட்டப்பட்ட பாலம் உடைந்தது. அங்கே பாம்புகளும் சர்வ சாதாரணமாக நடமாடின. விளையாட்டு நடக்கும் சமயத்தில், வீரர்கள் தங்குமிடத்தில் ஏராளமான, 'காண்டம்கள்' கண்டெடுக்கப்பட்டன... இவர்கள் விளையாடத் தான் வந்தவர்களா?வெகு சாதாரணமாக அரசியல்வாதிகள், லட்சங்களிலும், கோடிகளிலும் புரள, சாமான்ய மனிதனோ, வறுமைக் கோட்டை தாண்ட முடியாமல், தெருக்கோடியில் சிங்கிள் டீக்காக, நாயாக வெயிலில் அலைகிறான்.இவர்கள் விலை உயர்ந்த வெளிநாட்டு, 'ஏசி' கார்களில் நகரை வலம் வரும் போது, வறுமைக் கோட்டை தாண்ட முடியாத சாமான்யன், பருப்புக்கும், சர்க்கரைக்கும், ரேஷன் கடை கியூவில் வியர்வை ஊற, கொதிக்கும் அனலில் நிற்கிறான்.வறுமைக் கோட்டுக்கான வரம்பு குறித்து, மத்திய திட்டக் கமிஷன் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நகர்ப்புறங்களில் வசிப்போர், தினமும், 32 ரூபாய்க்கு மேல் செலவிட்டால், அவர்கள் வறுமைக் கோட்டு வரம்பிற்குள் வரமாட்டார்கள். அதேபோல், கிராமப்புறங்களில் வசிப்போர் தினமும், 26 ரூபாய்க்கு மேல் செலவிட்டால், அவர்களும் இந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வரமாட்டார்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை சாப்பாட்டுக்கே, குறைந்தபட்சம், 20 ரூபாய் செலவழிக்க வேண்டிய சூழலில், நாள் ஒன்றுக்கு, சிங்கிள் டீ குடிக்கக் கூட, மிச்சமுள்ள ஆறு ரூபாய் போதாது. 'அதற்கு மேல் செலவு செய்யாதே... செய்தால், நீ பணக்காரன்...' என்று கூறும் வகையில் உள்ளது அறிக்கையின் தொனி.மக்கள் எப்படி இருக்கின்றனர், அவர்கள் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பதை அறிய, ஒரு காலத்தில் அரசர்கள், மாறுவேடத்தில் நகர்வலம் வருவர் என்று படித்திருக்கிறோம்.இன்று நம்மை ஆள்பவர்கள், ஒருநாள் நகரில் பஸ் ஓடாவிட்டாலும், மக்கள் நடந்து சென்றாலும், ஆட்டோவிற்கு அநியாயமாக பணம் கொடுத்தாலும், நம்மைப் பற்றிய கவலையே அவர்களுக்கு இல்லை.

'சிங்காரச் சென்னை' என்று வெறும் வாயால் புகழப்படும் நகரில், சாலை வசதிகள் எப்படி உள்ளன? எங்கு பார்த்தாலும், பிளாட்பாரங்களில் ஆண்கள் சிறுநீர் கழித்து, நாறடிக்கின்றனர். மக்களுடைய அவசிய தேவைக்கான கழிவறை வசதிகள் இங்கு இல்லை. ஆண்களாவது இப்படி ஆங்காங்கே தங்கள் வேலையை முடித்துக் கொள்கின்றனர்; பாவம் பெண்கள்... அவர்கள் தங்கள் அவசரத்திற்கு எங்கே செல்வர்?இப்படிப்பட்ட சாமான்யர்களான நாம், வறுமைக் கோட்டை தாண்டுவது தான் எப்படி, எப்பொழுது?ஆயிரக்கணக்கான கோடிகளை சுரண்டும் அரசியல்வாதிகள், லட்சக்கணக்கான கோடிகளை, வரிஏய்ப்பு செய்யும் தொழிலதிபர்கள், நூற்றுக்கணக்கான கோடிகளை கருப்புப் பணமாக பதுக்கும் சினிமாக்காரர்கள், அதிகாரிகள் இவர்களெல்லாம், 'ஜல்சா' செய்யும் தேசத்தில், நாம் வறுமைக் கோட்டை தாண்டுவது எப்படி?இவர்களை விசாரிக்கவோ, தண்டிக்கவோ, இவர்களிடமிருக்கும் அபரிமிதமான பணத்தை எடுத்து, மக்களுக்கு திருப்பி தரும் திட்டமோ அரசுக்கு இல்லை.சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தை எடுத்து வருவதாக, சவடால் விடும் அரசியல்வாதிகள், இந்த தேசத்திலேயே இருக்கும் கருப்புப் பணத்தை பற்றி ஏன் கவலை படுவதில்லை?

ஆயிரக்கணக்கான கோடி திருடும் ஆள், தலைவன் ஆகிறான். வறுமைக் கோட்டை தாண்ட முடியாத சாமான்யனோ, பஸ்சில் நாலு ரூபாய்க்கு டிக்கெட் எடுக்காவிட்டால், அவனை பிடித்து விடும் போக்குவரத்து துறை அதிகாரிகள், ஏதோ பெரிய தேச துரோகியை பிடித்து விட்டதாக பார்ப்பதையும், ஏசுவதையும் பார்க்க, நெஞ்சு பொறுக்குதில்லையே!வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்களுக்கு, அடுத்ததாய் இலவச மொபைல் போன் வழங்கப் போவதாக கேள்விப்பட்டேன். வாழ்நாளெல்லாம் அதில் இலவசமாப் பேசிக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வந்துள்ளது. என்ன பேச... வறுமைக் கோட்டை எப்படி தாங்குவது என்றா?சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளாகியும் ஒரு தேசம், வறுமைக் கோட்டை அழிக்கவில்லை என்றால், இதை விட ஒரு அவமானம் இருக்க முடியுமா?அரசு நடத்த வேண்டிய கல்விக் கூடங்களை, தனியார் நடத்துகின்றனர்; தனியார் நடத்த வேண்டிய மதுக்கடைகளை, அரசு நடத்துகிறது.எல்லாருக்கும் ஒரே, நியாயமான கல்வி, அடிப்படை மருத்துவ வசதிகள், மானத்துடன் உயிர் வாழ்வதற்கான உரிமை, அச்சமின்றி எழுத, பேசும் உரிமை, குறைந்தபட்ச அத்தியாவசிய தேவைகள் நிறைவேறிய நிலை, ஒவ்வொரு தனி மனிதனுக்கும், எப்போது இங்கே கிடைக்குமோ, அப்போது தான், இந்த நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதற்கான அர்த்தம் முழுமை அடையும். 80 சதவீத மக்கள் அன்றாடங் காய்ச்சிகளாக இருக்கும் தேசத்தில், 20 சதவீத மக்கள் மட்டும் மாட, மாளிகைகளில் ஆடம்பர வாழ்வில், சுகமாக வாழ்வதற்கு வசதியாக, அரசியலையும், அதிகாரத்தையும் கைப்பற்றும் நிலையை கண்டால், நெஞ்சு பொறுக்குதில்லையே!

மக்களுக்கு சேவை செய்வதே, அரசியல்வாதிகள் வேலை. அவர்கள் எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள், அமைச்சராக இருந்தால், அவர்களுக்கு மிக நல்ல சம்பளம் இருக்கிறது. தேவைப்படும் போது, அவர்களே தங்கள் சம்பளத்தையும் உயர்த்திக் கொள்கின்றனர். இந்த உரிமை இந்தியாவில் வேறு யாருக்கும் இல்லை.எத்தனையோ, வசதி வாய்ப்புகள் கிடைத்தும், அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்ய ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தாமல், நடுத்தர மக்களிடம் இருக்கும் தொழில்களையும் பிடுங்கிக் கொள்வதை பார்த்தால், நெஞ்சு பொறுக்குதில்லையே!

Email:affu16.gmail.com

அப்சல்சிந்தனையாளர், எழுத்தாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ