| ADDED : நவ 18, 2025 06:43 AM
சேலம்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில், த.மா.கா., தலைவர் வாசன் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் வாசன் அளித்த பேட்டி: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக இருக்கும் பழனிசாமியை, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். த.மா.கா., நான்கு மண்டலங்களாக பிரித்து பிரசாரத்தை துவங்க உள்ளோம். ஒத்த கருத்துடைய பல்வேறு கட்சிகள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வர உள்ளன. தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆனால், சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த இயலாத அரசாக தி.மு.க., உள்ளது. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளில், சில மாற்றங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் கூறுகின்றனர். அதற்காகத்தான் எதிர்க்கின்றனரே தவிர, தி.மு.க.,வை போல தோல்வி பயத்தில் எஸ்.ஐ.ஆர்., வேண்டாம் என அவர்கள் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.