சென்னை: 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக, நாளை நடக்கும் போராட்டத்தில், த.வெ.க., பலத்தை காட்ட வேண்டும்' என, கட்சியினருக்கு, த.வெ.க., தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். த.வெ.க., தலைவர் விஜய், கடந்த செப்., 27ம் தேதி, கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். அதன்பின், விஜய் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை, ஒரு மாதம் வரை, கட்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இருந்தனர். தற்போது, மீண்டும் கட்சி நடவடிக்கைகளில், கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு, த.வெ.க.,வும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதற்காக, தமிழகம் முழுதும், த.வெ.க., சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. சென்னையில் பொதுச்செயலர் ஆனந்த் பங்கேற்க உள்ளார். மற்ற மாவட்டங்களில், கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமை ஏற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, கட்சியின் மாவட்ட செயலர்களுக்கு, விஜய் 'இ - மெயில்' அனுப்பி உள்ளார். அதில், 'போலீசார் அனுமதி அளிக்கும் இடத்தில் மட்டுமே, ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும், பொதுமக்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும், இடையூறு ஏற்படுத்தக் கூடாது' என, விஜய் அறிவுரை வழங்கி உள்ளார். தேர்தலில், 'தி.மு.க.,விற்கும், த.வெ.க.,விற்கும் இடையே மட்டும்தான் போட்டி' என, விஜய் முழங்கி வருகிறார். எனவே, நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.,வை மிஞ்சும் அளவிற்கு பலத்தை காட்ட வேண்டும் எனவும், மாவட்ட செயலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 'பலத்தையும் காண்பிக்க வேண்டும்; போலீசாரின் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்' என உத்தரவிட்டுள்ளதால், மாவட்டச் செயலர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.