பாலியல் தொல்லை வழக்கு முன்னாள் ஐ.ஜி.,க்கு வாரன்ட்
சென்னை:பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய, ஓய்வு பெற்ற ஐ.ஜி., முருகன், விசாரணைக்கு ஆஜராகாததால், சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்துள்ளது.தமிழக காவல் துறையில், ஈரோடு அதிரடிப்படை ஐ.ஜி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முருகன். இவர், லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்த போது, தனக்கு கீழ் பணியாற்றிய, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி மொபைல் போனுக்கு, ஆபாச தகவல்களை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். முருகன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, முருகன் ஆஜராகாமல் இருந்துள்ளார். இவ்வழக்கு நேற்றுமுன்தினம் சைதாப்பேட்டை, 11வது நீதிமன்ற நீதிபதி சுல்தானா ஆரிபீன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய அவர் ஆஜராகவில்லை. இதனால், முருகனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.