உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் :கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து திடீர் அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் :கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து திடீர் அதிகரிப்பு

மேட்டூர் : காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு, 55 ஆயிரம் கனஅடி நீர் வருகிறது. ஒரு சில நாளில், கே.ஆர்.எஸ்., அணை நிரம்பி விடும் என்பதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம், ஜூன் 6ம் தேதி, 116 அடியாகவும், நீர் இருப்பு, 87.5 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. டெல்டா பாசனத்துக்கு நீர்திறக்கப்பட்டதால், நேற்று நீர்மட்டம், 78 அடியாகவும், நீர் இருப்பு, 40 டி.எம்.சி.,யாகவும் குறைந்தது. இரு மாதத்தில் நீர்மட்டம், 38 அடியும், நீர் இருப்பு, 47.5 டி.எம்.சி.,யும் குறைந்து விட்டது.

இரு நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கர்நாடக அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், வினாடிக்கு, 7, 500 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து, நேற்று, வினாடிக்கு, 11 ஆயிரத்து, 700 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம், வினாடிக்கு, 22 ஆயிரத்து, 500 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்வரத்து நேற்று, 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணை நிரம்ப இன்னமும் ஐந்து டி.எம்.சி., நீர் மட்டுமே தேவை. நேற்று, ஹேரங்கி அணைக்கு வினாடிக்கு, 8, 880 கனஅடி நீர்வந்தது. 8.5 டி.எம்.சி., நீர் தேக்கம் கொண்ட ஹேரங்கி அணை நேற்று இரவு நிரம்பியது. ஹேமாவதி அணைக்கு வினாடிக்கு, 9, 713 கனஅடி நீர் தேவை. 37 டி.எம்.சி, நீர்தேக்கம் கொண்ட ஹேமாவதி நிரம்ப 5 டி.எம்.சி., நீர்மட்டுமே தேவை. கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளுக்கும் நேற்று, வினாடிக்கு, 55 ஆயிரம் கனஅடி நீர்வந்தது.

ஹேரங்கி, ஹேமாவதி அணை நிரம்பினால் உபரி நீர் கே.ஆர்.எஸ்., அணைக்கு திறக்கப்படும். அதனால், கே.ஆர்.எஸ்., அணை ஒரு சில நாளில் நிரம்பி விடும். அதன் பின், கர்நாடக அணைகளுக்கு வரும் உபரி நீர் முழுவதும், மேட்டூர் அணைக்கு திறக்கப்படும் என்பதால் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிக்கும். நேற்று கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. அதனால், நேற்று வினாடிக்கு, 4, 700 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து இன்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி