மேலும் செய்திகள்
3 லட்சம் மரக்கன்றுகள்; இலக்கு நெருங்கியது
02-Dec-2024
உடுமலை: புலிகள் காப்பகம் திட்டத்தால், வனம், வன விலங்குகள் மட்டுமன்றி, நீர் ஆதாரங்களும் காக்கப்பட்டுள்ளது, என, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பேசினார்.வனத்துக்குள் திருப்பூர்-10, திட்டத்தில் நடப்பாண்டு, 3 லட்சம் மரக்கன்றுகள் இலக்கு நிறைவு விழா, உடுமலை அமராவதி சைனிக் பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் தலைமை வகித்தார்.வெற்றி அமைப்பு தலைவர் சிவராம் பேசுகையில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் என, சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, திருப்பூர் தொழில் துறையினர் இணைந்து நடத்திய இரங்கல் கூட்டத்தில், அவர் கூறியபடி, ஒவ்வொருவரும், 10 மரக்கன்றுகள் நட வேண்டும், என்ற கொள்கையை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.அன்று துவங்கி, 10 ஆண்டுகளில், 21 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், 3 லட்சம் மரக்கன்றுகள் இலக்கு எட்டப்பட்டுள்ளளுது. அதே போல், அரசு பள்ளி மேம்பாடு, நீர் நிலைகள் புனரமைத்தல் என சூழல் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்,'' என்றார்.ஆனைமலை புலிகள் காப்பகம், வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் வெங்கடேஷ் பேசியதாவது:வனம், வன விலங்குகளை காப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வேண்டும். மொத்த நிலப்பரப்பில், 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். வனங்களை விரிவாக்க முடியாத நிலையில், மக்களுடன் இணைத்து, பசுமை உருவாக்கும் பணி மேற்கொள்ள, அனைவரின் கரங்களும் இணைய வேண்டும்.இந்தியா முழுவதும், 57 புலிகள் காப்பங்களும், தமிழகத்தில், 5ம் உள்ளன. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆண்டு முழுவதும் நீர் வரத்து உள்ள தாமிரபரணி ஆற்றை காத்துள்ளது. 11 அழிந்த காட்டாறுகள் மீட்கப்பட்டுள்ளது. 26 ஆயிரம் கனஅடி நீர் அதிகரித்துள்ளது.மலைகளில் சேமிக்கப்படும் நீர், ஆண்டு முழுவதும் ஆறாக ஓடி, நமக்கு குடிநீர், விவசாயம் என அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளது. அதனால், புலிகள் காப்பக திட்டம் என்பது, வனத்தையும், வனச்சூழலையும் காக்கும் ஒன்றாகும்.இவ்வாறு, பேசினார்.இதில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா, சென்னை எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்துார்பாரி, ஓசை அமைப்பு நிறுவனர் காளிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
02-Dec-2024