| ADDED : ஜூன் 27, 2024 03:31 AM
பள்ளிப்பாளையம்: காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவால், தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், ஓடப்பள்ளி தடுப்பணை நீர் தேக்கத்தில், தேவையான தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.பள்ளிப்பாளையம் அடுத்த ஓடப்பள்ளி பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில், 9 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, 2011ல் இருந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த மின் உற்பத்தி திறன், 30 மெகாவாட். ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும் போதும், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போதும், மின் உற்பத்தி நடக்கும்.தடுப்பணை நீர் தேக்கத்தில், 10 கி.மீ., துாரத்திற்கு தண்ணீர் தேக்கி இருக்கும். ஆற்றில் தண்ணீர் வரத்து அடிப்படையில் மின் உற்பத்தி ஏற்றம், இறக்கமாக காணப்படும். ஆற்றில் குறைந்தளவு தண்ணீர் வரும் போது, குடிநீர் தேவைக்கு மட்டும் தேக்கி வைக்கப்படும். நீர்தேக்க பகுதியான, ஆவத்திபாளையத்திலிருந்து தண்ணீர் எடுத்து, சுத்திகரிக்கப்பட்டு மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுவதால், முக்கிய குடிநீர் ஆதாரமாக இது உள்ளது. கடந்த ஒரு வாரமாக ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால், ஆற்றில் வரும் தண்ணீரை, தடையின்றி குடிநீர் வினியோகத்திற்கு தேவையானளவு தேக்கி வைக்கப்பட்டுள்ளது.