உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங். மாநாட்டை புறக்கணிக்கிறோம் துாத்துக்குடியில் கிளம்பியது எதிர்ப்பு

காங். மாநாட்டை புறக்கணிக்கிறோம் துாத்துக்குடியில் கிளம்பியது எதிர்ப்பு

துாத்துக்குடி:திருநெல்வேலியில் நடக்கும் காங். மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக துாத்துக்குடியில் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங். கட்சியில் கோஷ்டி பூசலுக்கு எப்போதுமே பஞ்சம் கிடையாது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால், காங். சார்பில், வாக்கு திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை காப்போம் என்ற தலைப்பில் செப். 7ம் தேதி மாநாடு நடக்கிறது. இதில், கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (செப். 3) நடக்கும் என துாத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், துாத்துக்குடியில் நடக்கும் பிரச்னையை காங். தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறியும் திருநெல்வேலியில் 7 ம் நடக்கும் மாநாட்டை புறக்கணிப்பதாக காங். மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி என்பவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: துாத்துக்குடியில் எப்போது கூட்டம் நடத்தினாலும் இளங்கோவன் ஆதரவாளரான மாநில துணைத் தலைவர் சண்முகத்திற்கு சொந்தமான ஹோட்டலில் மட்டுமே நடத்தப்படுகிறது. அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படுகிறது. மற்றவர்கள் யாரையும் கலந்து ஆலோசிப்பது இல்லை. மாவட்ட தலைவர் முரளிதரன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து ஆலோசனை கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். கட்சியின் கூட்டங்களை பொது இடங்களில் நடத்தாமல் ஒரு சார்பு அணியினரின் இடத்தில் நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். இதைப் பற்றி பலமுறை தலைமையிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. காங். வடக்கு மாவட்ட தலைவர் பதவி 7 ஆண்டுகளாக காலியாக உள்ளது. அதை நிரப்பும்படி வலியுறுத்தப்பட்டது. அதற்கும் பதில் இல்லை. கட்சியின் வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபட்டாலும் அதற்கு உறுதுணையாக தலைமை இல்லை. எனவே நாங்கள் திருநெல்வேலி மாநாட்டை புறக்கணிக்கின்றோம். இருப்பினும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருப்போம். கட்சிக்கு விசுவாசமாக இருப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காங். மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி, ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலராகவும் உள்ளார். 2011 சட்டசபை தேர்தலில் காங். சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர், பல்வேறு கட்சிகளுக்கு சென்ற அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மீண்டும் காங். கட்சியில் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை