உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலோரம் வீசும் காற்று 90 கி.மீ., வேகம்

கடலோரம் வீசும் காற்று 90 கி.மீ., வேகம்

சென்னை: வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல், இன்று மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது, கடலோர மாவட்டங்களில், மணிக்கு, 90 கி.மீ., வேகத்தில் பலத்த புயல் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. புயலை சமாளிக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையும், மாவட்ட நிர்வாகங்களும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளன. தெற்கு வங்கக்கடலில், கடந்த, 25ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது, நேற்று முன்தினம் புயலாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வளி மண்டல அடுக்குகளில் ஏற்பட்ட காற்று முறிவு காரணமாக, புயலாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், காற்று முறிவு பாதிப்புகள் நேற்று காலை முதல் சீரடைய துவங்கின. இதையடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல், 2:30 மணி அளவில் புயலாக வலுவடைந்தது. இதற்கு சவுதி அரேபியா பரிந்துரை செய்துள்ளபடி, 'பெஞ்சல்' என, பெயரிடப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, பெஞ்சல் புயல் நாகப்பட்டினத்தில் இருந்து, 260 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து, 270 கி.மீ., துாரத்திலும், சென்னையில் இருந்து, 300 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இந்த புயல், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல், மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, புதுச்சேரி அருகே இன்று மாலையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் மணிக்கு, 70 முதல், 80 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 90 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்யும். அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, 21 செ.மீ.,க்கு மேல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலுார், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று, 20 செ.மீ., வரை மிக கன மழை பெய்யலாம் என்பதால், அதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், 12 செ.மீ., வரை கன மழை பெய்யும்

நாளை

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில், நாளை மிக கன மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்று எச்சரிக்கை

பெஞ்சல் புயல் காரணமாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மணிக்கு, 70 முதல், 80 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும். இடையிடையே, 90 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். புயல் இன்று கரையை கடக்ககூடும் என்பதால், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், வருவாய் பேரிடர் மேலாண்மை துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கடலோர பகுதிகள், தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

கணிப்புகளில் மாறுபாடு ஏன்?

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் கரையை கடக்கும் போது, சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு, இந்த முறை காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் அதிக மாற்றங்கள் காணப்பட்டன. கடந்த, 25ம் தேதி காற்றழுத்த தழ்வு பகுதி உருவானது, பின், 26, 27ம் தேதிகளில், இது இலங்கையை நெருங்கிய சமயத்தில் வேகம் குறைந்தது. அதேநேரத்தில், இதில் காற்று முறிவு ஏற்பட்டது. மேலும், அந்த சமயத்தில் இது நிலை கொண்டிருந்த இடத்துக்கு அருகில், அதிக மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், 28ம் தேதி நிலவிய காற்று முறிவு பாதிப்பு நேற்று சீரடைந்து, இதன் கீழ் அடுக்கில் காற்று குவிதல் வலுடைந்தது. அதனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. இதில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, அது தொடர்பான கணிப்புகளும் வேறுபட்டு இருந்தன. நேற்று மாலை நிலவரப்படி, மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் இந்த புயல் நகர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மரக்காணம் அருகே

கரையை கடக்கும்! தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக மிக கன மழை, அதி கனமழை என அறிவிப்புகள் வந்தும், மழை வரவில்லையே என்று மக்கள் நினைக்கின்றனர். இந்த குறிப்பிட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில், எதிர்பார்ப்புக்கு மிஞ்சிய வகையில், அதிக மாற்றங்கள் ஏற்பட்டதே அதற்கு காரணம். இதுவரை வந்த அறிவிப்புகள் போன்று இல்லாமல், தற்போதைய அறிவிப்பை கவனத்துடன் அணுக வேண்டும். வடகடலோர மாவட்டங்களை நோக்கி, புயல் வேகமாக நகர்ந்து வருகிறது. இதில் இதுவரை ஏற்பட்ட பிரச்னைகள், அடுத்த, 24 மணி நேரத்தில் இருக்காது என்று எதிர்பார்க்கிறோம். தற்போதைய நிலவரப்படி, இந்த புயல் இன்று மாலை அல்லது இரவில், மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, மரக்காணம் அருகே கரையை கடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
நவ 30, 2024 07:30

புயல் வந்தவுடன் மோடி நிதி கொடுக்கவில்லை என்று ஒப்பாரி வைக்க ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.


Palanisamy Sekar
நவ 30, 2024 07:25

பெஞ்சல் நின்னு நின்னு விளையாடுதே. அதனால் வானிலை கணிப்பாளர்களுக்கும் கெட்டபெயர் தான் மிஞ்சியது. புயல்ன்னு சொல்றாங்களே ஆனால் மணிக்கு பத்து கிலோமீட்டர் வேகத்துலதான் நகருதே . போகிற போக்கை பார்த்தால் பெஞ்ச்ல் தமிழகம் வரப்பிடிக்காமல் ஆந்திரா பக்கம் வேடிக்கை காட்ட போய்விடுமான்னு தெரியல. டிசம்பர் மாசம் வந்தாலே மக்களுக்கு ஒருவித கிலி வந்துடுது. அந்த கிலியை இந்த முறை பெஞ்சல் எடுத்துக்கிச்சு . பார்ப்போம்.


Mani . V
நவ 30, 2024 05:47

தீவிர ஏற்பாடுன்னா என்னா சார்? எதுவும் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் தீவிர ஏற்பாடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை