செந்தில் பாலாஜி தம்பிக்கான நிபந்தனைகள் என்னென்ன? அமலாக்கத்துறை தெரிவிக்க உத்தரவு
சென்னை:அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்வதற்காக செல்ல, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு அனுமதி அளித்தால், அவருக்கு என்னென்ன நிபந்தனைகள் விதிக்கலாம் என்பது குறித்து, அமலாக்கத்துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார், செந்தில் பாலாஜி முன்னாள் உதவியாளர் சண்முகம் உட்பட, 13 பேருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அமெரிக்கா செல்ல அனுமதி கோரி, அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்குமார் தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அசோக்குமார் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, அமெரிக்காவில் சிகிச்சை பெறவுள்ள தேதி உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வெளிநாடு செல்ல மனுதாரரை அனுமதித்தால், அவரது மனைவியின் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. அப்போது, 'அசோக் குமாருடன் அவரது மனைவியும், அமெரிக்கா செல்ல உள்ளதால், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க இயலாது. மாறாக, அவரது மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயாராக உள்ளோம்' என, அசோக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அசோக்குமாரை அமெரிக்கா செல்ல அனுமதிக்கும்பட்சத்தில், அவருக்கு என்னென்ன நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது குறித்து, அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டனர்.