சென்னை; தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட வாரியத்தின், 70 திட்ட பகுதிகளில், பட்டா பெற முடியாமல் ஒதுக்கீட்டாளர்கள் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில், நகர்ப்புற மேம்பாடு என்ற பெயரில், 190 இடங்களில் குடியிருப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட இத்திட்டங்களில், அந்தந்த பகுதியில் வசிப்போருக்கு மனைகள் ஒதுக்கப்பட்டன. இந்த மனைகளுக்கான தவணை தொகைகளை ஒதுக்கீட்டாளர்கள் கட்டி முடித்து விட்டனர். விற்பனை பத்திரம் கேட்டு, ஒதுக்கீட்டாளர்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தை அணுகினர். இதில் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள், வெவ்வேறு துறைகளை சேர்ந்தது என்பதால், அந்தந்த துறைகளிடம் இருந்து உரிய ஒப்புதல் பெற வேண்டும் என தெரியவந்தது. இதனால், விற்பனை பத்திரம், பட்டா பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 190 இடங்களில் மனை ஒதுக்கீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் பிற துறைகளின் நிலங்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த நிலங்களை முறையாக, அந்தந்த துறைகளிடம் இருந்து பெறவில்லை. இதனால், தலைமை செயலர் தலைமையில் உயர் அதிகாரிகள் குழு அமைத்து, நிலங்களை நகர்ப்புற வாரியத்திடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, 120 திட்டப்பகுதி நிலங்கள் முறையாக வாரியத்தின் பெயருக்கு மாற்றப்பட்டு, ஒதுக்கீட்டா ளர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய, 70 திட்ட பகுதிகளில், நிலம் ஒப்படைப்பு இன்னும் நிறைவடையவில்லை. இதனால், இத்திட்டங்களின் ஒதுக்கீட்டாளர்கள் தங்கள் பெயருக்கு பட்டா பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயரதிகாரிகள் குழு கூட்டம் நடத்தி, இவர்களுக்கு பட்டா பெறுவதில் இருக்கும் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.