சென்னை: 'கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக, உள்குத்து வேலையில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., இளைஞர் அணி செயலரும், அமைச்சருமான உதயநிதி, கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.தி.மு.க., சார்பில், லோக்சபா தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.கள நிலவரம்இக்குழுவினர், தொகுதிக்கு உட்பட்ட, பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலர்கள்,மேயர், நகராட்சி தலைவர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் என அனைவரையும், கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்து, தேர்தல் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.அதன்படி நேற்று, கோவை, சேலம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினர்.ஒவ்வொரு நிர்வாகியையும் தனித்தனியே அழைத்து, தொகுதியில் தற்போதுள்ள சூழல், கள நிலவரம் குறித்து, அவர்கள் கருத்துக்களைகேட்டறிந்தனர்.சேலம் மாவட்ட நிர்வாகிகள் சிலர் பேசுகையில், 'மாவட்டத்தில் சில புள்ளிகள், அ.தி.மு.க.,வுடன் தொடர்பில் உள்ளனர். இது கட்சி வளர்ச்சியை பாதிக்கிறது. தேர்தல் வெற்றியை பாதிக்கும்' என, தெரிவித்துள்ளனர்.அதை கேட்ட அமைச்சர் உதயநிதி, 'அ.தி.மு.க., தொடர்பில் இருப்பவர்கள் யார் என்ற விபரங்களை அளியுங்கள். விசாரித்து தகவல்களில் உண்மை இருப்பின், கட்சியை ஏமாற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது, நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். 'உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தால், எங்களிடம் தெரிவியுங்கள்; நாங்கள் அதை தீர்த்து வைக்கிறோம். கட்சி நிறுத்தும் வேட்பாளருக்காக, அனைவரும் பணியாற்ற வேண்டும். உள்குத்து வேலையில் ஈடுபட்டு, வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், யாராக இருந்தாலும் அவர்கள் பதவியில் இருக்க மாட்டார்கள்' என, எச்சரித்துள்ளார்.கோவை நிர்வாகிகளிடம் பேசியபோது, 'கொங்கு மண்டலத்தில், இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். ஏராளமான நிர்வாகிகள் உள்ளனர். ஆனால், கட்சி தேர்தல் குழுவில் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை' என ஆதங்கத்தை கொட்டியுள்ளனர்.முக்கியத்துவம்அதற்கு உதயநிதி, 'சரியான நேரத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கட்சியினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப் படும்' என சமாளித்துஉள்ளார். மேலும் அவர், 'தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினாலும், அந்த வேட்பாளர் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.'இந்த தேர்தல், இந்தியாவுக்கே முக்கியமான தேர்தல். தமிழகத்தை காக்க வேண்டும். அதற்காக ஓரணியில் நின்று, தேர்தல் வெற்றிக்கு உழையுங்கள்' என கூறியுள்ளார்.