சென்னை:அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், மேல்விசாரணை நடத்தத் தோன்றியது ஏன் என, புலன் விசாரணை அதிகாரியிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இருவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை மறுஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இவ்வழக்கில் நேற்று விசாரணை துவங்கியது. அமைச்சர் தங்கம் தென்னரசு மனைவி சார்பில், மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதாடினார். பின், அமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ் வாதாடியதாவது:ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பழிவாங்கும் விதமாக சொத்து குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்குப் பதிவுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை பரிசீலித்திருக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்த வழக்கில், தொடர் விசாரணை நடத்தி, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது மறுவிசாரணை அல்ல; புதிய விசாரணையும் அல்ல; மேல் விசாரணை தான்.உயர் அதிகாரியின் ஒப்புதல் பெற்றே, மேல் விசாரணை நடந்துள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என அறிக்கை தாக்கல் செய்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவிக்கலாம்.இவ்வாறு மூத்த வழக்கறிஞர் வாதாடினார்.பின், 'புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை அழைத்து, ஊழல் வழக்குகளை எத்தனை ஆண்டுகள் விசாரிக்கிறீர்கள்? வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தின் அடிப்படையில், மேல் விசாரணை நடத்தியிருக்கிறீர்களா? 'விடுவிக்கக் கோரிய மனு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என, 2016ல் பதில் மனு தாக்கல் செய்யும் போது, மேல்விசாரணை நடத்த வேண்டும் என தோன்றவில்லையா? 2021ல் மேல்விசாரணை நடத்த தோன்றியது ஏன்?' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.அதற்கு, அதிகாரி பூமிநாதன், ''ஏழு ஆண்டுகளாக ஊழல் வழக்குகளை புலன் விசாரணை செய்கிறேன். வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தின் அடிப்படையில், மேல்விசாரணை நடத்தப்பட்டது,'' என, பதில் அளித்தார்.இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், அட்வகேட் ஜெனரல் வாதத்துக்காக, விசாரணையை வரும் 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.