உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் தடுக்கப்படுமா? கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பகீர்

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் தடுக்கப்படுமா? கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பகீர்

விருத்தாசலம் : கல்வி, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்.குழந்தை திருமண தடை சட்டம், 1929ல் கொண்டு வரப்பட்டது. அப்போது, பெண்ணின் திருமண வயது 14 என்றும், 1940ல் திருத்தத்தின்படி 15 வயது, 1978ல் 18 வயது என்றும் உயர்த்தப்பட்டது. இச்சட்டத்தின்படி, 18 வயதுக்கு குறைவானவர்களை திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தண்டனைக்கு உள்ளாவர் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான சீராய்வுகளுக்கு பிறகு 2006ல், குழந்தை திருமண தடைச் சட்டம் உறுதியானது. அப்போது தான், பெண்ணின் திருமண வயது 18 என உறுதி செய்யப்பட்டது. பெண் மனதளவிலும், உடல் அளவிலும் முழுமையான வளர்ச்சியடைய வேண்டும் என்பதே இச்சட்டத்தின் நோக்கம்.கல்வி மற்றும் பொருளாதாராத்தில் மிகவும் பின்தங்கிய கடலுார், விழுப்புரம், (கள்ளக்குறிச்சி உள்ளடக்கிய) மாவட்டங்களில், கடந்த 2013ம் ஆண்டு மார்ச் முதல் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான 51 மாதங்களில்,்617 குழந்தை திருமணங்கள் அதிகாரிகளால் நிறுத்தப்பட்டன.

குழந்தை திருமணம் ஏன்

வறுமை மற்றும் பொருளாதார காரணங்களால் பெண் குழந்தைகள் மேற்படிப்பு தொடர முடியாத நிலையில், 10ம் வகுப்பு முடித்த நிலையிலேயே, பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இதுபோன்ற சில திருமணங்களை, அதிகாரிகளின் கவனத்திற்கு தெரிந்தபோது, தடுத்த நிறுத்தப்பட்டன.இம்மாவட்டங்களில் விவசாயமே பிரதான தொழில் என்றாலும் அடிக்கடி ஏற்படும் இயற்கை பாதிப்புகளால் விவசாயிகள், விவசாய கூலிகள் வேலை தேடி சென்னை, கோவை, திருப்பூர், சேலம் மட்டுமன்றி மும்பை, குஜராத், கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கும் செல்கின்றனர்.இவர்களின் குழந்தைகள், அவரவர் வயதான தாத்தா, பாட்டி அல்லது உறவினர் பராமரிப்பில் வளரும் போது, சிலர் தடம் மாறுகின்றனர். சில பெற்றோர், தங்கள் குழந்தைகள் பருவமடைந்ததும், பாதுகாப்பு கருதி உடனடியாக திருமணம் செய்தும் வைத்துவிடுகின்றனர்.

மொபைல் மோகம்

பெருகி வரும் சினிமா கலாசார சீரழிவு, சமூக வலைதளங்களின் தவறான வழிகாட்டல் மூலம் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும்போதே சிறுவயதிலேயே காதல் வயப்படுகின்றனர். கொரோனா பரவலால், ஆன்லைன் வகுப்புகளில் துவங்கிய மொபைல்போன் மோகம், மாணவர்கள் பலரையும் தவறாக வழி நடத்தியது. உள்ளங்கையில் மொபைல் போனால் சீரழியும் சிறுமிகள், பின்விளைவுகள் தெரியாமல், வீட்டை விட்டு ஓட்டம் பிடிக்கும் அவலம் தொடர்கிறது.

சமூக ஆர்வலர்கள் கருத்து

கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிலையான தொழில் இல்லாதவர்கள் வேலைதேடி பிற மாநில, மாவட்டங்களுக்கு செல்கின்றனர். அவர்கள் பெண் குழந்தைகளை உடன் அழைத்து செல்ல முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதனாலும், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, உறவினர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் அவலமும் நடந்து வருகிறதுஎனவே, பள்ளி, கல்லுாரிகளில் மாணவிகளின் கற்றல் திறன் மட்டுமல்லாது அவரது செயல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால், ஒழுக்கக்கல்வி குறித்த புரிதலை புகுத்தி, கல்வியில் கவனம் செலுத்த வைக்க வேண்டும்.

மருத்துவர்கள் அதிர்ச்சி

இம்மாவட்டங்களில், சிறுமிகள் பலர் கர்ப்பமடைந்து சிகிச்சைக்கு வருவதால் மருத்துவ ஊழியர்கள் அதிர்ச்சியடைகின்றனர். பெரும்பாலும் 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகள் கர்ப்பமடைந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும்போது மட்டுமே தெரிகிறது. உடனடியாக வட்டார விரிவாக்க அலுவலர் மற்றும் மருத்துவ அலுவலர் மூலம் அந்தந்த அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று மாவட்ட புள்ளி விவரம் விழுப்புரம்

சமூக நலத்துறை புள்ளி விவரத்தின்படி, மாவட்டதில் 2020ம் ஆண்டில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 108 புகார்கள் பெறப்பட்ட நிலையில், 97 திருமணங்கள் தடுக்கப்பட்டன. 11 நடந்து முடிந்ததால் அந்த புகார்களின் மீது 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிவாகின. 2021ல் 136 புகார்களில், 111 திருமணங்கள் தடுக்கப்பட்டன. திருமணமான 25 புகார்களில், 25 வழக்குகள் பதிவாகின. 2022ல் 101 புகார்களில், 73 தடுத்து நிறுத்தியும், திருமணமான 28 புகார்களில், 28 வழக்கும் பதிவாகின. 2023ல் 62 புகார்களில், 38 தடுத்து நிறுத்தியும், 24 புகார்கள் மீது வழக்கு பதிவாகின. 2024ல் 79 புகார்களில், 43 தடுத்து நிறுத்தியும், 37 புகார்களில் வழக்குகள் பதிவாகின. 2025ல் (ஜனவரி - மார்ச்) 12 புகார்களில், 2 தடுத்து நிறுத்தியும், திருமணமான 10 புகார்களின் மீதும் வழக்கு பதிவாகின.

கள்ளக்குறிச்சி

மாவட்டத்தில், 2022ல் 112 புகார்களில், 100 தடுத்து நிறுத்தியும், திருமணமான 12 புகார்கள் மீது வழக்கு பதிவாகின. 2023ல் 95 புகார்களில், 80 தடுத்தும், 15 புகார்கள் மீது வழக்கு பதிவாகின. 2024ல் 89 புகர்களில், 46 தடுத்தும், 43 புகார்கள் மீது வழக்கு பதிவாகின.

கடலுார்

மாவட்டத்தில் 2021ல் 114 புகார்களில், 88 தடுத்து நிறுத்தியும், திருமணமான 26 புகார்கள் மீது வழக்குகள் பதிவாகின. 2022ல் 165 புகார்களில், 110 தடுக்கப்பட்டது. திருமணமான 55 புகார்கள் மீது வழக்கு பதிவாகின. 2023ல் 147 புகார்களில், 103 தடுத்து நிறுத்தியும், திருமணமான 44 புகார்கள் மீது வழக்கும்; 2024ல் 139 புகார்களில், 90 தடுத்து நிறுத்தியும், திருமணமான 49 புகார்களுடன் 56 வழக்குகள் பதிவாகின.எனவே, கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கடலுார், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.----

பாக்ஸ்கள் ------------ அதிகாரிகள் ஆலோசனை

கடலுார் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சித்ரா கூறுகையில்,'குடும்பச் சூழல் மற்றும் சிறு வயது காதல் தெரிந்து பெற்றோர் வற்புறுத்தலால், சொந்தத்தில் திருமணம் நடக்கிறது. மேலும், வெளியூர் வேலைக்கு செல்லும் பெற்றோர் பாதுகாப்பு இன்மை கருதியும் திருமணங்கள் நடக்கிறது. காதலில் சிக்கி, பெற்றோருக்கு தெரியாமல், அவர்களாகவே திருமணம் செய்து கொள்வதும் அதிகமாக நடக்கிறது.குழந்தைத் திருமண தடுப்பு சட்டம் குறித்து கல்வித்துறை, காவல் துறை, சுகாதாரம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு போன்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்' என்றார்.கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தீபிகா கூறுகையில்,'குழந்தை திருமணங்கள் குறித்த போக்கு மாறிவருகிறது. இதன் தண்டனை, விளைவுகள் அறிந்த பெற்றோர் அச்சமடைந்து, பெண் குழந்தைகளை 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்க தயாராக இல்லை. ஆனால், 18 வயதுக்கு குறைவான மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்கு தீர்வாக சினிமா கதைகள் காதலில் இருந்து சுயமாக சமூக மாற்றம், சுயதீர்வு காண்பதில் மாற வேண்டும். பெண் குழந்தையை காப்பாற்றுவோம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் திட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தை திருமண துாண்டுதலை எதிர்த்து போராடவும், பருவ இளம்பெண்களின் கல்வி மற்றும் தொழில் விருப்பங்களை வளர்க்கவும், ஊக்குவிக்கவும் மாவட்ட நிர்வாகம் முனைப்பாக செயல்பட்டு வருகிறது' என்றார்.---

மருத்துவர் சொல்வது என்ன

விருத்தாசலம் நகராட்சி தலைவரும், டாக்டருமான சங்கவி முருகதாஸ் கூறுகையில், 'சிறு வயதில் திருமணமாகும் பெண்களின் உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். சமுதாயத்தில் உரிய அந்தஸ்து, அதிகாரம், அறிவு முதிர்ச்சி போன்றவை இல்லாமல் சிறு வயதிலேயே திருமண பந்தத்திற்கு உள்ளாகும் பெண்கள் பெரும்பாலும், வீட்டில் வன்முறைக்கு ஆளாகின்றனர்.மேலும் பாலியல் துன்புறுத்தல், சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு சென்று வருந்துகின்றனர். சிறு வயது திருமணத்தால் சிறுமியர்களுக்கு கல்வியும் பொருத்தமான வேலைவாய்ப்பும் மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் தொடர்ந்து வறுமையிலேயே வாடும் சூழல் உருவாகிறது. முழு உடல் வளர்ச்சி பெறாத நிலையில், மகப்பேறு காலத்தில் தாய் சேய் இறப்பு சதவீதம் மிக அதிகமாக உள்ளது. தமிழக அரசின் நலத்திட்டங்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்திய நிறுவப்படுகிறது. அதுவே பெண்கள் சுயமாக, நம்பிக்கையுடன் தங்கள் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் செலுத்த உதவுகிறது. எனவே. குழந்தை திருமணத்தில் இருந்து விடுபட்டு, சாதனைகள் படைக்க பெண் குழந்தைகளை வாழ்த்துவோம்' என்றார்.

2020 அறிக்கை பகீர்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2020ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் 785 குழந்தை திருமணங்கள் தொடர்பான வழக்குகள் பதிவாகின. அதன்படி, கர்நாடகா மாநிலத்தில் அதிகபட்சமாக 184; அசாமில் 138; மேற்கு வங்கத்தில் 98 வழக்குகளும், 77 வழக்குகளுடன் தமிழகம் 4வது இடத்திலும் இருந்தது.கடந்த 2019ல், 523 குழந்தை திருமணங்கள் தொடர்பான வழக்குகள் பதிவான நிலையில், 2020ல், 785 வழக்குகள் பதிவாகின. இது கிட்டத்தட்ட, 40 சதவீதம் உயர்வாகும். கொரோனா பரவல், ஊரடங்கு அமல் போன்ற காரணங்களால், 2020ல் குழந்தைத் திருமணம் அதிகரிக்க வறுமையே முக்கிய காரணமாக கருதப்பட்டது.

அக்கறையில்லா ஆட்சியாளர்கள்

காலம் காலமாக குழந்தை திருமணங்கள் நடந்து வந்தாலும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சினிமா மற்றும் சமூக வலைதளங்கள். இளசுகளை ஈர்க்கும் வகையில் ஆபாச பேச்சு, நடனம், பாடல், கொடூர தாக்குதல் (ஆயுதங்களால்) அடங்கிய சினிமாக்களே அதிகம் வெளியாகின்றன. இவற்றை தணிக்கை குழுக்களும் கண்டுகொள்வது இல்லை.தமிழில் படத்துக்கு பெயர் வைத்தால் வரிச்சலுகை வழங்கும் தமிழக அரசு; ஆபாசங்களையும், ஆயுத பின்னணியையும் தடுக்க முன்வர வேண்டும். இன்றைய இளைஞர்களின் கனவு எந்த வகையில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. எனவே, ஆட்சியாளர்கள் இனியாவது விழித்து பெண் சமூகத்தை காப்பாற்ற வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிட்டுக்குருவி
ஏப் 06, 2025 20:29

முக்கியமான காரணம் பெண்களுக்கு தற்போதுள்ள பாதுகாப்பு குறைபாடாக இருக்கலாம் .ஏழ்மையிலுள்ள பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும்போது குழந்தைகளை தனித்து வீட்டில் விட்டு செல்லமுடியாத நிலைமை .குடியினால் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தினமும் செய்தித்தாள்களில் வந்தவண்ணம் இருக்கின்றது .இது தமிழ்நாட்டின் சாதனை பட்டியலில் சேர்க்கலாம் .உலகிலேயே முதன்மையான மாநிலம் .


nb
ஏப் 06, 2025 08:42

திராவிட மாடல் வழியில் வளர்ச்சி அடைந்த தமிழகத்துல இப்படியா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை