சென்னை:''பல்கலை துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றி,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், 'பல்கலை துணை வேந்தர்களை மாநில முதல்வர்கள் நியமிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்காக அவருக்கு, சுயநிதி பொறியியல் கல்லுாரிகள் கூட்டமைப்பு, தனியார் கலை கல்லுாரிகள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், கல்வியாளர்கள் சார்பில் பாராட்டு விழா, சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் நேற்று நடந்தது. இதில், கல்வியாளர்கள் இணைந்து, முதல்வருக்கு வெள்ளி செங்கோலை பரிசாக வழங்கினர். நல்லதல்ல
பின், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:'மாநில சுயாட்சி நாயகர்' என, என்னை குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த தமிழக மக்கள் தான் மாநில சுயாட்சி நாயகர்கள். உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி அல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றி. அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் வாயிலாக தமிழகம் பெற்றுத் தந்த வெற்றி.உரக்கச் சொல்லாமல் விடப்படும் வெற்றியின் அமைதியில், பொய்கள் நாற்காலி போட்டு அமர்ந்து விடும்; அது, நாட்டுக்கு நல்லதல்ல. அதனால் தான் இந்த பாராட்டு விழா. முதல்வராகி, மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டினால், மத்திய அரசின் ஏஜன்டாக நியமிக்கப்பட்ட, தற்காலிகமாக இங்கே தங்கிஇருக்கும் கவர்னர் தடுத்து நிறுத்த முடியும் என்றால், மக்கள் போடும் ஓட்டுக்கு என்ன மரியாதை; எதற்காக தேர்தல் நடத்த வேண்டும்? கல்லுாரி இருக்கும் இடம் மாநில அரசுக்கு சொந்தமானது. ஆசிரியர்களுக்கு சம்பளமும், மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும், மாநில அரசே செய்து தருகிறது. ஆனால், பல்கலை துணை வேந்தரை கவர்னர் நியமிப்பார் என்றால், அது எந்த வகையில் நியாயம்?அதனால் தான் உச்ச நீதிமன்றம் சென்றோம். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், பல ஆண்டுகளாக நிலவிய பிரச்னைக்கு முடிவு கட்டியுள்ளது. அதாவது, பூனைக்கு மணி கட்டியுள்ளது. கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும், உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தந்துள்ளது. காலக்கெடு
சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க, கவர்னர், ஜனாதிபதிக்கு, உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இது, மிகப்பெரிய வெற்றி. இப்படி ஒரு கல்லில், பல மாங்காய்கள் அடித்திருக்கிறோம்.இந்த தீர்ப்பை தாங்கிக் கொள்ள முடியாமல், துணை ஜனாதிபதி, 'பார்லிமென்டுக்கே அதிக அதிகாரம்' என்கிறார். அதைத்தான் நாங்களும், 'கவர்னரை விட சட்டசபைக்கே அதிக அதிகாரம்' என்கிறோம். பிரதமரின் அதிகாரத்தை, ஜனாதிபதி எடுத்துக் கொண்டால் சும்மா இருப்பாரா? கவர்னருடன் நாங்கள் அதிகாரப் போட்டி நடத்தவில்லை; அவருடன் தனிப்பட்ட பகை இல்லை. சமீபத்தில் கூட கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது, நன்றாகத்தான் பேசிவிட்டு வந்தோம். தமிழகத்தின் உரிமையை எக்காலத்திலும் விட்டுத்தர மாட்டோம். இன்னும் பல துறைகளில், மாநிலங்களுக்கான உரிமைகள் முழுமையாக வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு தந்த நம்பிக்கையில், மாநில சுயாட்சி உரிமையை வென்றெடுக்க, உயர்மட்ட குழு அமைத்துள்ளோம். தமிழகத்தின் உயர் கல்வி வளர்ச்சியை மேலும் உயர்த்த, உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது.அறிவியல் ரீதியான அணுகுமுறை, சமூக நீதி ஆகிய, இரண்டும் தான் கல்வி நிலையங்களில் இருக்க வேண்டும். அதற்கு மாறாக எது நடந்தாலும், தி.மு.க., அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்கும். படிக்காமலேயே பணம் சம்பாதிக்கலாம் என்று, இப்போது சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அவர்கள் சொல்வது விதிவிலக்கு; விதிவிலக்கு எப்போதும் விதியாகாது. மாணவர்களை படிக்க விடக்கூடாது என்பதற்காக, புதிய கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம் என, கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்கள் வாயிலாக, ஜாதிய உணர்வுகளை துாண்டி திசை திருப்புகின்றனர். உங்கள், 'ரோல் மாடலை' சமூக வலைதளங்களில் தேடாதீர்கள்; அது பொழுதுபோக்கும் இடம் மட்டுமே. அதை மீறி படித்து முன்னேறுங்கள். அடுத்த நுாற்றாண்டுக்கான கல்வியை தர, கல்வியாளர்கள் முயற்சிக்க வேண்டும். எந்த தடை வந்தாலும், அதை முறியடித்து அனைவரையும் படிக்க வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
'ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றவித்தியாசம் இல்லாத கல்வி வேண்டும்'
* உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன்: உச்ச நீதிமன்றம் வரை சென்று, துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பெற்றுத் தந்து, மாநில உரிமையை முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டியுள்ளார். உயர் கல்வியில் தமிழகம் உச்சத்தில் இருப்பதற்கு, முதல்வர் ஸ்டாலினே காரணம்.* பாரத் பல்கலை நிறுவனர் ஜெகத்ரட்சகன்:உச்ச நீதிமன்றம் வரை சென்று, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமைகளை, முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தந்துள்ளார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வரலாற்றை அவர் படைத்து வருகிறார். தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றதும், அதற்காக ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். * வேலுார் வி.ஐ.டி., பல்கலை வேந்தர் ஜி.விஸ்வநாதன்: எந்த நாட்டில் கல்வி வளர்கிறதோ, அங்கு பொருளாதாரமும் வளரும் என்பது, தமிழகத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கல்வியில் இவ்வளவு சிக்கல் இருக்கக் கூடாது. நம் நாட்டில் மொழிக்கொள்கை, பாடத்திட்டம் உருவாக்கம், கல்வி நிலையங்களை நிர்வகிப்பது என, அனைத்திலும் பிரச்னை உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மத்திய அரசு, மாநில அரசு என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கல்வி இருக்க வேண்டும். * மதுரை தியாகராஜர் கல்விக்குழும நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன்: போராடி உரிமைகளை நிலைநாட்டுவது, முதல்வர் ஸ்டாலினின் மரபணுவிலேயே கலந்தது. அவரது தந்தை கருணாநிதி, சுதந்திர நாளில் கொடியேற்றும் உரிமையை, மாநில முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர். அவரது மகன் ஸ்டாலின், தமது போராட்ட உணர்வை மீண்டும் உணர்த்தியுள்ளார். இவ்வாறு அவர்கள் பேசினர்.விழாவில், சுயநிதி பொறியியல் கல்லுாரிகள் கூட்டமைப்பின் தலைவர் முனிரத்தினம் வரவேற்புரையாற்றினார். திருவண்ணாமலை அருணை கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் எ.வ.குமரன், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் பி.ஸ்ரீராம் உள்ளிட்டோர், விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.***