மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
2 hour(s) ago | 10
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3
சென்னை, மந்தைவெளியில் வங்கி பெண் அதிகாரி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கட்டட கான்ட்ராக்டர், கார்பெண்டர் உள்ளிட்ட 15 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, மந்தைவெளி, வேதாச்சலம் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 30. சார்ட்டட் அக்கவுன்டன்ட் படித்த இவர், ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாச்சாள், 26. எம்.பி.ஏ., முடித்துவிட்டு, சென்னையில் உள்ள அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியில் பணியாற்றி வந்தார். வாடகை வீட்டில், முதல் தளத்தில் வசித்துவரும் இவர்கள், இதே பகுதியில் உள்ள தேவநாதன் தெருவில், பங்களா வீடு கட்டி வருகின்றனர்.
நாச்சாளின் தந்தை வைரவன், செட்டிநாடு சிமென்ட்ஸ் நிறுவனத்தில் காசாளராக உள்ளார். தங்கை பரணி படித்துக் கொண்டிருக்கிறார். சொக்கலிங்கம், நாச்சாள் தம்பதியினருக்கு கடந்த நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்து, மூன்று வயதில், எல்.கே.ஜி., படிக்கும் மதுரவள்ளியம்மை என்ற குழந்தை உள்ளது. நாச்சாள் தினசரி பிற்பகல் பணிக்கு சென்று, இரவு வீட்டிற்குத் திரும்புவார். பணிக்குச் செல்லும் முன், தன் ஸ்கூட்டி வாகனத்தில், குழந்தையை அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு, வீட்டிற்குத் திரும்பி, அதன் பின் பணிக்குச் செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம், காலை வழக்கம் போல் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். இதனை, வீட்டின் கீழ் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். அதன் பின், வீட்டை விட்டு வெளியில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தினசரி தன் சகோதரியுடன் பேசும் தங்கை பரணி, வழக்கம் போல் நேற்று முன்தினம் பிற்பகல், போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், நாச்சாள் போனை எடுக்க வில்லை.
சந்தேகமடைந்த பரணி, நாச்சாள் பணியாற்றும் வங்கியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அங்கு அவர்கள் பணிக்கு வரவில்லை என கூறவே, சந்தேகம் மேலும் அதிகரிக்க, உடனடியாக அடுத்த தெருவில் உள்ள நாச்சாளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீடு திறந்து கிடந்ததையடுத்து உள்ளே சென்ற பரணி, படுக்கையறையில் பார்த்துள்ளார். நாச்சாள், படுக்கையின் கீழே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், கழுத்தில் துண்டால் இறுக்கப்பட்டு, தலைப்பகுதி பாலிதீன் உறையால் மூடப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்ட பரணி சப்தமிட்டதும், கீழ் வீட்டிலிருந்த பெண்கள் உடனடியாக வந்து நாச்சாளின் உடலில் கட்டப்பட்டிருந்த துண்டுகளை நீக்கி, மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முன்னதாக, நாச்சாளின் உடைகள் விலகியிருந்ததாகவும், ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் ,அவர் மானபங்க படுத்தப்பட்டிருக்கலாமோ என சந்தேகம் நிலவியது. ஆனால், மாதவிடாயால் ஏற்பட்ட ரத்தப்போக்கு என, டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டது.
நாச்சாளின் கழுத்தில் கிடந்த, 15 சவரன் மதிப்புள்ள தாலி மற்றும் செயின், 4 சவரன் மதிப்புள்ள வளையல்கள் மாயமாகியிருந்தன. கூடவே நாச்சாளின் மொபைல் போனையும் காணவில்லை; ஆனால், நாச்சாளின் காதில் உள்ள தோடு அப்படியே இருந்துள்ளது. சம்பவம் குறித்து, பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை சட்டம் - ஒழுங்கு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், தென்சென்னை இணை கமிஷனர் சண்முகராஜேஷ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் வந்து நாச்சாளை கட்டிப்போட்டு, நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.
கைரேகை நிபுணர்கள் வந்து, அறையில் பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, அது நாச்சாளின் வீட்டிலிருந்து, அவர்கள் கட்டி வரும் புது வீட்டிற்குச் சென்று பின்பு, செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் போய் நின்றது. இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ''கொலையாளிகள் இவர்களுக்கு தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது; விரைவில் பிடித்துவிடுவோம்,'' என்று கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.
கான்ட்ராக்டர், கார்பெண்டரிடம் விசாரணை: நாச்சாள் வீட்டிலிருந்து போலீஸ் மோப்ப நாய் சென்று, தேவநாதன் தெருவில் அவர்கள் கட்டி வரும் புதிய வீட்டில் நின்றதால், கான்ட்ராக்டரான கண்ணனை, போலீசார் நேற்று காலை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல், வீட்டிற்கு கார்பெண்டர் பணி செய்வதற்காக அழைக்கப்பட்ட ராஜூ, மரவேலைக்கு,' கொட்டேசன்' அளித்த ஆனந்த், அப்பகுதியில் உள்ள அயர்ன் கடைக்காரர்கள், கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்பவர் மற்றும் ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்டோரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது,'' பணம் மற்றும் நகைக்காக இந்த கொலை நடத்திருக்கலாம் என்பது உறுதியில்லை; வீட்டின் பீரோவில் லட்சக்கணக்கில் பணம் நகை உள்ளது. திருடப்பட்ட நகை மட்டுமே கொலையாளியின் நோக்கமாக இருக்காது,'' என்றார்.
2 hour(s) ago | 10
8 hour(s) ago | 1
10 hour(s) ago | 3