சென்னை: சென்னையில் நேற்று, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: திருப்பரங்குன்றத்தில், தீப துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கொடுப்பதாக நீதிபதி தெரிவித்தார். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா அருகில், 15 மீட்டர் தள்ளி தீபம் ஏற்றி கொள்வதில், தங்களுக்கு பிரச்னை இல்லை என்று, ஏற்கனவே இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு மாறாக, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று புதிய பெயர் வைக்கின்றனர்; அதை தி.மு.க., அரசு ரசிக்கிறது. மதுரையில் கலவரத்தை ஏற்படுத்துவது போலீசார் தான். தர்காவை சேர்ந்தவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. கோவில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்கிறார். மதுரை மக்களின் மனநிலையைத்தான் பா.ஜ., பிரதிபலிக்கிறது. பொது சொத்துக்கு தீ வைத்தனரா, இஸ்லாமியர்களை யாராவது தவறாக பேசினரா; அப்படி இருக்கும்போது, மதக்கலவரம் என்று எப்படி சொல்ல முடியும்? நீதித்துறையின் மாண்பை குறைத்து, சட்ட துறை அமைச்சரே தவறாக பேசியுள்ளார். சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலை, தி.மு.க., கையில் எடுத்துள்ளது. நீதிபதிக்கு எதிராக, அங்குள்ள ஜமாத் மக்களை வர சொல்கின்றனர்; பேரணி செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். 'போஸ்டர்' அடித்து ஒட்டுகின்றனர். அங்குள்ள ஜமாத், நீதிமன்றத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. இதற்காக, ஒரு நபரையாவது கைது செய்தனரா?தி.மு.க., அரசு தாஜா செய்யும் மத அரசியலை கையில் எடுத்துள்ளது. 'மைனாரிட்டி' ஓட்டுக்களை, லட்டு மாதிரி, சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும் என்று, தி.மு.க., நினைக்கிறது. இதை இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் விரும்பவில்லை. மொத்தத்தில் யாருடைய ஓட்டும் தி.மு.க.,வுக்கு கிடைக்கப் போவதில்லை; தி.மு.க., நடுத்தெருவில் நிற்க போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.