உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புலிகள் அமைப்பினருக்கு அடைக்கலம் வைகோ உதவியாளரிடம் விசாரணை

புலிகள் அமைப்பினருக்கு அடைக்கலம் வைகோ உதவியாளரிடம் விசாரணை

சென்னை:தடை செய்யப்பட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு, அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம், 'கியூ' பிரிவு போலீசார் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாத், 32. இவர், சென்னை கே.கே.நகர், 10 வது செக்டார் பகுதியில், அறை எடுத்து தங்கி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் நேரடி உதவியாளராக இருந்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பரில், தமிழகத்தில் அகதிகள் முகாமில் தங்கி இருந்த, இலங்கையை சேர்ந்த, தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு, அடைக்கலம் கொடுத்து வருவதாக, 'கியூ' பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து, 2024, டிசம்பரில், சென்னையில் உள்ள 'கியூ' பிரிவு அலுவலகத்திற்கு, அவரை வரவழைத்து விசாரித்தனர். அப்போது, வைகோ நடத்தும் கூட்டத்தில், தவறாமல் பங்கேற்கும் சந்தேக நபர்கள் இருவர் குறித்து கேட்டுள்ளனர். அவர், 'சம்பந்தப்பட்ட நபர்களை பல முறை பார்த்துள்ளேன். ஆனால், எனக்கு அறிமுகம் கிடையாது' என, வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு, பிரசாத் வீடியோ எடிட்டிங் செய்து தருவது உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், கே.கே.நகர் வீட்டு அறையில் இருந்த, கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களையும், கியூ பிரிவு போலீசார் கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த டிசம்பரில் சென்னை மாங்காடு பகுதியில், சட்ட விரோதமாக தங்கி இருந்த, நவநாதன்,42, இலக்கியன், 52 ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள், ஜவுளி வியாபாரிகள் போலவும், இந்திய பிரஜை போலவும், போலி ஆவணங்கள் வாயிலாக ஆதார் அட்டை, காஸ் இணைப்பு பெற்றிருப்பது தெரியவந்தது.விசாரணையில், தான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததாகவும், 2019ல், கள்ளத்தோணியில் தமிழகம் வந்தபோது, 250 கிராம் வெடி பொருட்களையும் எடுத்து வந்ததாகவும், அவை காணாமல் போய் விட்டதாகவும் இலக்கியன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நவநாதன் மற்றும் இலக்கியன் ஆகியோரின் கூட்டாளி சுரேஷ், 45 என்பவரை, கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.இந்த நபர்களோடு தொடர்புடையவர் என்பதாலேயே, பிரசாத்திடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட விபரமும் தற்போது வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை