பாக்., ராணுவ முகாம் மீது தாக்குதல்: ஒன்பது பேர் பலி
பெஷாவர்; பாகிஸ்தானில் ராணுவ முகாமின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகினர்; 16 பேர் காயமடைந்தனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பன்னுவில் ராணுவ முகாம் இயங்கி வருகிறது. இந்த முகாமின் சுற்றுச்சுவர் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு வாகனங்கள், நேற்று மாலை வேகமாக வந்து மோதின. இந்த தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகினர்; 16 பேர் காயமடைந்தனர்.தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், ராணுவ முகாமிற்குள் நுழைய முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதி முழுதும் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு, 'தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான்' என்ற பயங்கரவாதக் குழுவின் துணை அமைப்பான 'ஜெய்ஷ் - அல் - புர்சான்' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த கைபர் பக்துன்வா மாகாண முதல்வர் உத்தரவிட்டதுடன், உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.