மேலும் செய்திகள்
வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு
3 hour(s) ago
வாஷிங்டன்: இதுவரை அமெரிக்க அதிபர் தேர்தலில் இல்லாத வகையில், நாட்டு மக்களை கவரும்படி பல்வேறு சலுகை அறிவிப்புகளையும், திட்டங்களையும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெளியிட்டு வருகிறார். குழந்தை வரிச்சலுகை, வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை, நடுத்தர வர்க்கத்தினர் கடன் தள்ளுபடி என, பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், 59, போட்டியிடுகிறார். வரும் வாரத்தில் நடக்க உள்ள கட்சியின் மாநாட்டில், அவர் முறைப்படி அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட உள்ளார்.வழக்கமாக அதிபர் வேட்பாளர்கள், நாட்டின் வளர்ச்சிக்கான தங்களுடைய பொருளாதார திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்வர். மேலும், வெளியுறவுக் கொள்கைகள் குறித்தே அதிகம் பேசுவர். கடந்த சில தேர்தல்களாக, தங்களுடைய சாதனைகளை பேசுவதைவிட, எதிர்க்கட்சி வேட்பாளரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அங்கு அதிகரித்துள்ளது. நேரடி விவாதம்
அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்கள் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பர். அப்போது, தங்களுடைய பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் விவாதிப்பர். இதனடிப்படையிலேயே யாரைத் தேர்வு செய்வது என்பதை மக்கள் முடிவு செய்வர்.சமீபத்தில் இப்படி நடந்த விவாதத்தில்தான், டொனால்டு டிரம்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அதிபர் ஜோ பைடன் திணறினார். இதையடுத்து, அவர் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிய நிலையில், இந்திய வம்சாவளியான துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு அதிபர் வேட்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது.இவ்வாறு ஒரு பக்கம் விவாத நிகழ்ச்சிகள் நடத்தும் அதே நேரத்தில், ஆங்காங்கே பிரசார கூட்டங்கள் உள்ளிட்டவற்றிலும் அதிபர் வேட்பாளர்கள் பங்கேற்பர். இதிலும் கமலா ஹாரிஸ் புதுமையை கடைப்பிடித்து வருகிறார். மிகப்பெரிய கூட்டங்களில் பங்கேற்பதைவிட, 100 - 200 பேர் அடங்கிய சிறு சிறு குழுக்களை சந்தித்து, தன் கொள்கைகள் குறித்து விவரித்து வருகிறார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். நடுத்தர வர்க்கம்
தன் பிரசாரக் கூட்டங்களின்போது, மக்களுக்கு தாராளமான, கவர்ச்சிகரமான பல அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக நடுத்தர வருவாய் பிரிவினரை ஈர்க்கும் வகையில் அவருடைய அறிவிப்புகள் உள்ளன.“நடுத்தர வர்க்கத்தினர் வலுவாக இருந்தால்தான், நாடு வலுப்பெற முடியும்,” என கூட்டங்களில் அவர் பேசி வருகிறார். தன் தாய் பட்ட கஷ்டங்களை விவரித்து, நடுத்தர வர்க்கத்தினரின் வலி தனக்கு தெரியும் என்று அவர் பேசுவது மக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்துகிறது.மருத்துவ செலவுக்கான கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அவர் ஒரு கூட்டத்தில் அறிவித்தது, பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் மருந்துகளுக்கான விலை உச்சவரம்பை குறைப்பதாகவும் அறிவித்தார். முதல் முறையாக
இதைத் தொடர்ந்து, மக்களின் குடும்ப செலவுகளை குறைக்கும் வகையில், உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பேன் என்று அறிவித்தது, தாய்மார்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு கடனில் வரிச்சலுகை உள்ளிட்ட பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அமெரிக்காவில் குழந்தைகள் பிறக்கும்போது, பெற்றோருக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது. முதல் ஆண்டில், 6,000 டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில், 5 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகையை தருவதாக அறிவித்தார். “நாம் அனைவரும் இணைந்து, ஒரு புதிய பொருளாதார வாய்ப்பை உருவாக்குவோம். இதுவரை துவங்காதவர்களும், தங்களுடைய பொருளாதார பாதுகாப்பை துவக்க வழி ஏற்படுத்துவோம். இது உங்களுக்கானது மட்டுமல்ல, உங்கள் குழந்தைக்கானது,” என, பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் கூறி வருகிறார்.பொதுவாக அமெரிக்க பொருளாதாரத்தை, செலவழிக்கும் பொருளாதாரம் என்று கூறுவர். அதே நேரத்தில் இந்தியப் பொருளாதாரத்தை சேமிப்பு பொருளாதாரம் என்று கூறுவர். தற்போது அமெரிக்கர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை உருவாக்குவதே, கமலா ஹாரிசின் பொருளாதார கொள்கையின் அடிநாதம் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்வாக்குறுதிகள் என்ன?1 மருத்துவ செலவுக்கான கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். 2மருந்துகளுக்கான விலை உச்சவரம்பு குறைக்கப்படும்3 குடும்ப செலவுகளை குறைக்கும் வகையில், உணவுப் பொருள் விலை குறைக்கப்படும்4 முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு கடனில் வரிச்சலுகை அளிக்கப்படும்௫ குழந்தைகள் பிறக்கும்போது பெற்றோருக்கு, 5 லட்சம் ரூபாய் வரிச்சலுகை தரப்படும்..
3 hour(s) ago