உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் அதிபருடன் மோடி ஆலோசனை!

உக்ரைன் அதிபருடன் மோடி ஆலோசனை!

கீவ், ஆக. 24- உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை நேற்று சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுடன் நடக்கும் போர் குறித்து பேச்சு நடத்தினார். இரு தரப்பும் பேச்சில் ஈடுபட்டு அமைதி திரும்ப முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், 'போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; வெறும் பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை. அமைதியின் பக்கமே இந்தியா உள்ளது' என, சுட்டிக்காட்டினார். சோவியத் யூனியன் பிளவுபட்டபோது, அதில் இருந்து பல நாடுகள் உருவாகின. அதில் மிகப் பெரும் பகுதி ரஷ்யா என்று மாறியது. இதைத் தவிர பல நாடுகளும் உருவாகின. இவ்வாறு ரஷ்யாவை ஒட்டியுள்ள பகுதி, உக்ரைனாக மாறியது. கடந்த 1991, அக்., 24ல் அந்த நாடு சுதந்திரம் பெற்றது. ஆனாலும், அதை தன்னுடன் இணைப்பதற்கு ரஷ்யா தீவிரமாக முயற்சி மேற்கொண்டது.இதன்படி, 2014ல் முதல் முறையாக இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அப்போது, உக்ரைனின் கிரீமியா உள்ளிட்ட சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. டான்பாஸ் போர் என்று அழைக்கப்படும் இந்தப் போர், 2022 வரை அடிக்கடி மோதல்களாகவே இருந்து வந்தது. ஆனால், 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தீவிர போரைத் துவங்கியது; அது தற்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.முந்தைய, எட்டு ஆண்டுகள் நடந்த போரைவிட, தற்போது போர் மிகவும் தீவிரமாக உள்ளது. இதில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. சீனா, கொரியா உள்ளிட்டவை ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளன. அதே நேரத்தில் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகள், எந்தத் தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகின்றன.இந்தியா மற்றும் ரஷ்யா இடையே, எண்ணெய், அணு மின்சக்தி, ராணுவம் உட்பட பல துறைகளில் மிக நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வருகிறது.

கொரோனா தொற்றின்போது, வளைகுடா நாடுகளை மட்டுமே எண்ணெய் தேவைக்காக சார்ந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், உக்ரைனுடனான போர் தீவிரமடைந்த நிலையில், ரஷ்யா பல சலுகைகளுடன் எண்ணெய் விற்பனைக்கு முன்வந்தது. இதை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொண்டது.இதனால், ரஷ்யாவுக்கு ஆதரவும் தெரிவிக்காமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தது. அதே நேரத்தில், போரை நிறுத்தி, அமைதிக்கான பேச்சைத் துவங்கும்படி, இரு நாடுகளுக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.கடந்த ஜூலை மாதம், ரஷ்யாவுக்கு சென்றபோதும், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினிடம், பிரதமர் மோடி இதை வலியுறுத்தினார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், சமரசம் செய்ய இந்தியாவால் மட்டுமே முடியும் என, பல நாடுகள் கூறின. ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் சமநிலையில் நட்பு வைத்துள்ளதால், இந்தியா மீது அந்த நாடுகள் நம்பிக்கை தெரிவித்தன.போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு பிரதமர் மோடி பயணம் செய்துள்ளார். ஐரோப்பிய நாடான போலந்துக்குச் சென்ற அவர், அங்கிருந்து, 10 மணி நேர ரயில் பயணம் செய்து, உக்ரைனின் கீவ் நகரை நேற்று காலை சென்றடைந்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். கட்டித் தழுவி அவரை ஜெலன்ஸ்கி வரவேற்றார். உணர்ச்சி பெருக்கில் இருந்த ஜெலன்ஸ்கியின் தோளில் கைகளை போட்டு, பிரதமர் மோடி தேற்றினார்.இதைத் தொடர்ந்து, இருவரும், இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து பேசினர். குறிப்பாக இந்தப் பேச்சில், ரஷ்யா போர் குறித்தே அதிக நேரம் பேசப்பட்டது. உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை, வெறும் பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை என்பதை மோடி சுட்டிக் காட்டினார். அமைதியின் பக்கமே இந்தியா உள்ளது என்று குறிப்பிட்டார். போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்ற இந்தியாவின் நம்பிக்கையை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.தூதரக பேச்சு மற்றும் அமைதி பேச்சின் வாயிலாகவே, பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்திய அவர், இரு நாடுகளும் இதற்கு முன் வர வேண்டும் என்பதை முன்மொழிந்தார். போரால், இளம் குழந்தைகள் உயிரிழப்பது மிகவும் துர்பார்க்கியம் என்பதை ரஷ்யா, உக்ரைன் தலைவர்களுக்கு கோடிட்டு காட்டினார்.அமைதி திரும்புவதற்கு, இரு நாட்டுத் தலைவர்களும் முன்வந்தால், அதற்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்பதை தீர்க்கமாக குறிப்பிட்டார். பின்னர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இந்தியா வரும்படி பிரதமர் அழைப்பு விடுத்தார்.ஜெலன்ஸ்கியுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், தீர்வை நோக்கியதாகவும் இருந்தது என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். புடினுடனான தன் சமீபத்தில் சந்திப்பின்போது பேசிய விபரங்களையும் ஜெலன்ஸ்கியுடன் மோடி பகிர்ந்து கொண்டார். மோடியின் இந்தப் பயணம் ஒரு வரலாற்று சிறப்பிக்கது என, ஜெய்சங்கர் இறுதியாக குறிப்பிட்டார்.

ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சந்திப்பைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:1இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள உறவுகளை, பல்துறைகளில் இணைந்து செயல்படும் கூட்டாளி என்ற நிலைக்கு முன்னேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 2விவசாயம் மற்றும் உணவுத் தொழில், மருத்துவம், கலாசாரம் மற்றும் மனிதாபிமான உதவி என நான்கு ஒப்பந்தங்களில் இந்தியா - உக்ரைன் கையெழுத்திட்டன.3இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இதன் கூட்டுத் தலைவர்களாக இருப்பர். இந்தத் துறைகளில் அடுத்தக்கட்ட முன்னேற்றங்கள் தொடர்பாக, இவர்கள் தொடர்ந்து பேச்சு நடத்துவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கட்டியணைத்தது ஏன்?

ஜெய்சங்கர் விளக்கம்!கடந்த மாதம் ரஷ்யா சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினையும் கட்டியணைத்தார். இதை மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் விமர்சித்தனர். நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அளித்த விளக்கம்:பிரதமர் மோடி -- புடின் நட்பை மேற்கத்திய நாடுகள் தவறாக புரிந்து கொண்டுள்ளன. அதற்கு முக்கிய காரணம் கலாசார இடைவெளிதான். இதை அந்நாட்டினர் புரிந்து கொள்ளவில்லை. புடினை கட்டியணைத்ததை போலத்தான் இன்று ஜெலன்ஸ்கியையும் மோடி கட்டியணைத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பில் உக்ரைன் - ரஷ்யா போர் குறித்தே அதிகம் பேசப்பட்டது. விவசாயம் மற்றும் உணவுத் தொழில், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவி என நான்கு ஒப்பந்தங்களில் இந்தியா - உக்ரைன் கையெழுத்திட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ சாதனம் பரிசு!

இயற்கைப் பேரிடர் போன்றவற்றின் அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ சேவை வழங்குவதற்காக, இந்தியாவால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது, பீஷ்ம் க்யூப் எனப்படும் சிறிய மருத்துவ சாதனம்.மிகவும் கையடக்கமான இந்த சாதனத்தை கைகளில் எடுத்துச் செல்ல முடியும். எந்த இடத்திலும் பயன்படுத்த முடியும். அவசர காலங்களில் உடனடி முதல் மருத்துவ சேவை அளிக்க இதைப் பயன்படுத்தலாம்.பாரத் ஹெல்த் இனிஷியேட்டிவ் பார் சகயோகிக் ஹிதா மற்றும் மைத்ரி என்பதன் சுருக்கமே பீஷ்ம். அதாவது, ஒத்துழைப்பு மற்றும் நட்பு நாடுகளுக்கு உதவும் வகையிலான இந்தியாவின் மருத்துவ முயற்சி என்பது இதன் அர்த்தமாகும்.இது கிட்டத்தட்ட ஒரு குட்டி மருத்துவனை மற்றும் அறுவை சிகிச்சை மையமாகும். அத்தியாவசிய மருந்துகளுடன், வெட்டுக் காயங்கள், தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். எலும்பு முறிவுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். சிறிய அளவிலான அறுவை சிகிச்சையும் செய்ய முடியும்.ஒரு க்யூப் வாயிலாக, ஒரு நாளில், 10 - 15 அறுவை சிகிச்சைகள் செய்ய முடியும். மேலும், 200 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த சாதனம், தனக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும், அதுபோல, ஆக்சிஜனையும் உருவாக்கும். எந்த ஒரு பருவநிலையிலும் பயன்படுத்த முடியும்.இதுபோன்ற நான்கு பீஷ்ம் க்யூப்களை, உக்ரைனுக்கு இந்தியா பரிசாக அளித்துள்ளது.

காந்திக்கு மரியாதை

கீவ் நகரின் அமைதி பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர் துாவி மரியாதை செய்தார். இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'கீவில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரின் லட்சியங்கள் உலகளாவியவை. அது லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை தருகின்றன. இந்த நாளில், மனித குலத்திற்கு அவர் காட்டிய பாதையை நாம் அனைவரும் பின்பற்றுவோம்' என, குறிப்பிட்டுள்ளார்.

10 லட்சம் லைக்குகள்

பிரதமர் மோடியுடனான சந்திப்பு புகைப்படங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'இந்தியா - உக்ரைன் இடையேயான உரையாடல் மற்றும் உறவை வலுப்படுத்த எங்கள் சந்திப்பு முக்கியமானது' என, அவர் குறிப்பிட்டிருந்தார். இருவரின் புகைப்படங்கள் பகிரப்பட்ட சில மணி நேரத்திலேயே 10 லட்சம் பேர் அதை விரும்பும் விதமாக 'லைக்' செய்திருந்தனர்.

குழந்தைகள் நினைவிடத்தில் அஞ்சலி

கீவ் நகரில் உள்ள போரில் உயிரிழந்த குழந்தைகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த போர் பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை ஜெலன்ஸ்கியுடன் இணைந்து அவர் பார்வையிட்டார். அப்போது, அவரின் தோள்களில் கைகளை போட்டு ஜெலன்ஸ்கிக்கு பிரதமர் ஆறுதல் தெரிவித்தார். அங்கிருந்த சுவர் ஒன்றின் முன் ஏராளமான பொம்மைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு பொம்மையை வைத்த பிரதமர் மோடி, உயிரிழந்த குழந்தைகளுக்கு இரு கரம் கூப்பி அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்தார். இது குறித்து தன் சமூகவலைதள பக்கத்தில் பிரதமர் மோடி, 'மோதல்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு பேரழிவாக அமைந்துவிடுகின்றன. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு மன வலிமையை தர இறைவனை பிரார்த்திக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Visu
ஆக 24, 2024 21:32

தமிழே ததிகிநிதத்தோம் நாம துபாய் சிங்கப்பூர் அமெரிக்கா ஹா ஹா ஹா


Gopala Krishnan
ஆக 24, 2024 20:19

உன்ன மாதிரி தமிழ் மட்டுமே தெரிந்து கொண்டு குன்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர் அவர் அல்ல.... தவிர இன்டி கூட்டணி மேடையில் இந்தி தெரியாமல் நித்தீஸிடம் வாங்கி கட்டி கொணட நம்ம முதல்வர்னு நெனச்சிட்டீங்க போல.....அவர் உலகத் தலைவர் ஆங்கிலம் சரளமாக தெரியும்....நீங்க வேற ஏதாவது உருட்டுங்க பாஸ்....!!!


venugopal s
ஆக 24, 2024 18:25

உக்ரைன் அதிபருக்கு ஹிந்தியும் தெரியாது குஜராத்தியும் தெரியாது. அவர் என்ன சொன்னாரோ இவர் என்ன புரிந்து கொண்டாரோ, கடவுளுக்கே வெளிச்சம்!


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 13:29

எந்த ஒரு உயிர் வதையிலும் அது இலங்கை தமிழர்கள் ஆகட்டும் , பங்களாதேஸ் இந்துக்கள் ஆகட்டும், உக்ரைன் போர் ஆகட்டும் , முதலில் வதைபடுவது பெண்கள் மற்றும் அவர்களை சார்ந்த குழந்தைகள் தான் , இந்த வேதனையை உணர்த தலைவராக திரு மோடி இருப்பதை பெருமையாக கருதுகிறேன்


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 13:21

இதற்கிடையில் இந்தியாவை தரக்குறைவாக பேசி ஜெலன்ஸ்கி மனம்திருந்தி மன்னிப்பு கேட்டானா ?


ஆரூர் ரங்
ஆக 24, 2024 11:16

போர் என்ற புலியின் மேல் ஏறியுள்ள புடின் இறங்கி வர வாய்ப்பில்லை..அடுத்த நிமிடமே மேலே அனுப்பப்படுவான்.


ஜம்புகுமார்
ஆக 24, 2024 08:39

புட்டின், ஜெலன்ஸ்கி ரெண்டு பேரையும் கட்டிப்புடிச்சு ஆதரவு தெரிவிச்சாச்சு. யார் ஜெயிச்சாலும் வெற்றி நமதே.


Anand
ஆக 24, 2024 10:45

மோடி அவர்கள் சமாதானத்தை வலியுறுத்தி அமைதியை நிலைநாட்ட உதவுவாரே தவிர, திருட்டு கூட்டத்தை போல அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகளை கொன்று குவித்தவனிடம் பல்லிளித்து பரிசு பொருட்களை பெற்று நம்பிக்கை/இனத்துரோகம் செய்யமாட்டார்.


Kasimani Baskaran
ஆக 24, 2024 07:18

உக்ரேனுக்கு மட்டுமல்ல - சிக்கலில் இருக்கும் இரஸ்யாவுக்கு போர் நிறுத்தம் அவசியம். உக்ரைன் கூட ஆயுத விற்பனையாளர்களுடன் சேர்ந்தால் அதிகமாக கடனில்தான் மூழ்க வேண்டும். விவேகமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டால் நல்ல பலன் உண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை