உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்த ஆதரவாளர். வெற்றி!

ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்த ஆதரவாளர். வெற்றி!

டெஹ்ரான் : ஈரான் அதிபர் தேர்தலில், டாக்டரும், நீண்டகாலம் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியுள்ள, சீர்திருத்தங்களுக்கு ஆதரவாளரான மசூத் பெசஸ்கியான், 69, வெற்றி பெற்றார். இதையடுத்து, ஈரானில் பின்பற்றப்படும் பழமைவாத நடைமுறைகள் மற்றும் வெளியுறவு கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. . மேற்கு ஆசிய நாடான ஈரானின் அதிபராக இருந்த முகமது ரைசி, கடந்த மே மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.கடந்த மாதம் நடந்த தேர்தலில், மசூத் பெசஸ்கியான் முன்னிலை பெற்றார். ஆனாலும், அந்த நாட்டின் சட்டத்தின்படி, மொத்தம் பதிவான ஓட்டுகளில், 50 சதவீதம் பெற்றால் மட்டுமே அதிபராக முடியும்.

பொருளாதார தடை

அதன்படி, அந்தத் தேர்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பெசஸ்கியான் மற்றும் தீவிர மதப்பற்றாளரான சயீத் ஜலிலி இடையே, இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்தத் தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்று, பெசஸ்கியான் வெற்றி பெற்றுள்ளார்.மேற்கு ஆசியாவில் நிலவிவரும் மோதல்கள் மற்றும் மற்ற சூழ்நிலைகளுக்கு இடையே, ஈரானை வழிநடத்தும் பொறுப்பு பெசஸ்கியானுக்கு வந்துள்ளது.குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக, ஈரான் செயல்பட்டு வருகிறது. மேலும், அந்த பிராந்தியத்தில் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.கடந்த, 2018ல் அணுசக்தி தொடர்பாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேறியது. இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இந்தாண்டு இறுதியில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தல் முடிவுகள், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.எண்ணெய் பொருட்களைத் தவிர, யுரேனியமும் ஈரானில் அதிகம் உள்ளது. அணுசக்தி உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் யுரேனியத்தை, அணு ஆயுதம் செய்வதற்கு ஏற்ப, ஈரான் மேம்படுத்தி வருகிறது. இது, உலக நாடுகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே உள்நாட்டிலும் பொருளாதார பாதிப்பு உட்பட பல விஷயங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், சீர்திருத்தங்களுக்கு ஆதரவாளரான பெசஸ்கியான், நாட்டை எப்படி வழி நடத்திச் செல்ல உள்ளார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஈரானில், பெண்கள் வெளியில் செல்லும்போது தலை மற்றும் முகத்தை மறைக்கும், 'ஹிஜாப்' அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கடந்தாண்டு பெரும் போராட்டம் வெடித்தது. இந்த விஷயத்தில், பெண்களுக்கு ஆதரவாகவும், தான் ஆட்சிக்கு வந்தால், இந்த விதிமுறைகளை தளர்த்துவதாகவும் பெசஸ்கியான் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அமெரிக்கா போன்ற நாடுகளுடன் மோதல் போக்கை தவிர்க்க, வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் பெசஸ்கியால் ஆர்வமாக உள்ளார்.இந்தியாவை பொறுத்தவரை, எண்ணெய் தேவைகளுக்கு ஈரானின் உதவி தேவை. ஏற்கனவே, இரு நாடுகளுக்கும் இடையே, வர்த்தக ரீதியில் நட்புறவு உள்ளது.

புதிய முதலீடு

அது தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல, ஈரானின் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. மேலும் புதிய முதலீடுகளுக்கான நீண்டகால ஒப்பந்தமும் சமீபத்தில் செய்யப்பட்டுள்ளது.வணிக மற்றும் சர்வதேச அரசியல் ரீதியில் இந்தத் துறைமுகம் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் திட்டமும் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஈரானைப் பொறுத்தவரை, அங்கு அனைத்து முடிவுகளையும் எடுப்பது, உயர் மதத் தலைவரான அயதுல்லா அலி கொமோனி தான். மேலும், தற்போது அரசு மற்றும் அரசியலில் முக்கிய இடங்களில் உள்ளவர்களில் பெரும்பாலானோர், தீவிர மதப்பாற்றாளர்களே.அதனால், ஈரானின் வெளிநாட்டுக் கொள்கை உள்ளிட்டவற்றில் பெரிய அளவில் மாற்றம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஓட்டு சதவீதம் குறைவு: பெசஸ்கியான் கவலை

அதிபர் தேர்தலுக்கு, ஜூன் 28ல் முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதில், 6.14 கோடி வாக்காளர்களில், 39.93 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டளித்தனர். அந்த தேர்தலில், 1.04 கோடி ஓட்டுகளை பெசஸ்கியான் பெற்றார். இரண்டாவது இடத்தைப் பிடித்த சயீத் ஜலிலி, 94 லட்சம் ஓட்டுகள் பெற்றார். மொத்தம் பதிவான ஓட்டுகளில், 44 சதவீதம் பெசஸ்கியானுக்கு கிடைத்தது. அதே நேரத்தில் ஜலிலிக்கு, 40 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தது. அதில், முதல் கட்டத்தில் போட்டியிட்ட மற்ற மதவாதப் பற்றாளர்களின் ஓட்டுகளும் ஜலிலிக்கு கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. இந்நிலையில், தேர்தல் பிரசாரங்களில் பெசஸ்கியான் மிகவும் உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:நம் நாட்டு பெண்கள், தங்களுடைய திருமணம், கல்வி, வேலை, உடை, வாழ்க்கை முறையை தாங்களே நிர்ணயித்து கொள்ள விரும்புகின்றனர் என்பதை அறிவேன். தங்களுடைய விருப்பங்களையே பின்பற்ற விரும்புகின்றனர். அதை நான் மதிக்கிறேன். அதற்கான தளத்தை நான் உருவாக்கி தருவேன்.மக்களே, நாட்டின் துாண்கள். தேர்தலில், 60 சதவீத மக்கள் ஓட்டளிக்க வரவில்லை என்றால், நம் மீது ஏதோ பிரச்னை உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் ஒரு தனி ரகமாக இருக்க முடியாது. 40 சதவீத மக்கள் ஓட்டளித்ததை வைத்து, தலைமையை நிர்ணயிக்க முடியாது.நாட்டு மக்களின் ஒத்துழைப்பு நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், நம்மைப் போலவே, அவர்களுக்கும், அவர்களுடைய குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பு இருக்க வேண்டும். புகார் கொடுக்கும் குழந்தைகள் ஏன் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஜலிலி ஆட்சிக்கு வந்தால், நம் நாட்டின் மீது ஏற்கனவே உள்ள பொருளாதார தடைகள் மேலும் அதிகரித்துவிடும். இது நம் பொருளாதாரத்தை, மதிப்பை பாதித்துவிடும். இந்த உலகில் நாமும் வளர்ச்சி அடைய வேண்டும். ஒவ்வொருவருக்கும் சிறந்த வாழ்க்கையை அளிக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் பேசுவோம், பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம்.வட கொரியா போல், இரும்புத்திரை நாடாக நாம் இருக்க முடியாது. வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். பல்வேறு கலாசாரங்கள், பலதரப்பட்ட பார்வைகள், இனக்குழுக்கள் கொண்ட நாடு ஈரான். படிப்படியாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இரண்டாம் கட்டத் தேர்தலில், 49.68 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதில், பெசஸ்கியானுக்கு 54.76 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பேசும் தமிழன்
ஜூலை 07, 2024 11:29

இனியாவது..... பெண்களை மதியுங்கள்..... அவர்களும் மனிதர்கள் தான் என்று நினையுங்கள்..... பெண்கள் அவர்கள் விரும்பும் ஆடையை அணியலாம் என்ற நிலை வர வேண்டும்.


kantharvan
ஜூலை 07, 2024 09:41

ஊருக்கு மட்டுமே உபதேசமா ? காசி சற்று பின்னோக்கி உமது கருத்துக்களை பாருங்கள்...எவ்வளவு வெறி.


Kasimani Baskaran
ஜூலை 07, 2024 03:09

மதவெறியை விட்டொழித்தால் ஈரான் நிச்சயம் சாதிக்கும். இஸ்ரேல் வெறுப்பில் ஆட்டம் போட்டால் ஆபத்து என்பதை உணரவேண்டும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி